தமிழ்நாட்டில் வெப்ப அலையால் ஏற்படும், ஹீட் ஸ்ட்ரோக்கில் சிக்கும் மக்களை காப்பாற்ற அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள்

இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:

தமிழகத்தில் இயல்புக்கு மாறாக, இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், நீர்ச்சத்து இழப்பு, மயக்கம், தலைசுற்றல், ஹீட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பலரும் ஆளாகின்றனர். வெப்ப அலை பாதிப்பை சமாளிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.

வெப்பத்தால், திடீர் உடல் நல குறைவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவ கட்டமைப்பை தயார் நிலையில் வைத்துள்ளோம். தலைமை செயலருடனும், மாவட்ட நிர்வாகங்களுடனும் அடிக்கடி ஆலோசித்து, உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். ஹீட் ஸ்ட்ரோக் பிரச்னையை போக்க, அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை அமைத்துள்ளோம்.

மருத்துவமனைகளுக்கு வரும் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள், பொதுமக்களுக்கு, உப்பு – சர்க்கரை கரைசலான ஓ.ஆர்.எஸ்., குடிநீர் வழங்கவும், அவர்களே பருகும் வகையில் பல இடங்களில் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், 10.37 லட்சம் ஓ.ஆர்.எஸ்., பாக்கெட்டுகள் கையிருப்பில் உள்ளன. கோடைக்காலம் முழுவதையும் சமாளிக்க கூடுதலாக, 2.17 கோடி ரூபாய்க்கு, 88.77 லட்சம் பாக்கெட்டுகளை வாங்க உள்ளோம்.

அதிகரிக்கும் வெப்பத்தாக்கம் குறித்து, மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதேசமயம் அச்சமடைய தேவையில்லை. அவசியமின்றி முதியோர், இணை நோயாளிகள், குழந்தைகள், பகலில் வெளியில் வர வேண்டாம்.

Related posts

Leave a Comment