ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்

ஏர்வாடி தர்காவின் 850-ஆம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்காவில் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் 850-ஆம் ஆண்டு சந்தனக்கூடு சமூக நல்லிணக்க திருவிழா மவ்லீது ஷரீப் உடன் மே 9-ஆம் தேதி தொடங்கியது. அதனையடுத்து மே 19-ஆம் தேதி நடைபெற்ற கொடியேற்று விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி நேற்று மாலை 4.30 மணிக்கு யானை, குதிரைகள் நடனமாட, தாரை தப்பட்டை ஒலிக்க, வான வேடிக்கையுடன் ஊர்வலமாக தைக்காவில் இருந்து போர்வை எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி முஜாவீர் நல்ல இபுராஹீம் தர்ஹாவில் இருந்து சந்தனக்கூடு எடுத்து, அலங்கார ரதத்துடன் ஊர்வலம் புறப்பட்டு, அதிகாலை 5.50 மணியளவில் தர்ஹா வந்தடைந்தது.சந்தனக்கூடு தர்ஹாவை 3 முறை வலம் வந்த பின்பு சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. அதன்பின் மக்பராவில் பச்சை மற்றும் பல வண்ண போர்வைகளால் போற்றப்பட்டு மல்லிகை பூச்சரங்களால் அலங்கரிக்கப்பட்டு சந்தனம் பூசப்பட்டது.

சந்தனக்கூடு திருவிழாவை காண கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். தர்கா வளாகத்தில் சிறப்பு மருத்துவக் குழுவினர் முகாமிட்டு சிசிச்சை அளித்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு தர்காவுக்கு சென்ற ராமநாதபுரம் ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன், கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் ஆகியோருக்கு தர்கா ஹக்தார்கள் கமிட்டி சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment