இண்டியா கூட்டணி வெற்றி பெறாத வெற்று கூட்டணி என்பதை அதன் தலைவர்களே உணர்ந்து விட்டார்கள். முன்னாள் ஆளுநர் தமிழிசை பதிவு

முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியை வீழ்த்தி இந்தியாவை காக்க உருவாக்கப்பட்ட கூட்டணி இண்டியா கூட்டணி என்றவர்கள், இன்றைக்கு மக்களின் எதிர்ப்பை பெற்று வெற்றி கிட்டாது என்ற பதற்றத்தின் முகட்டில் நிற்கிறனர்.

பல்லாண்டு காலமாக தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்றமமதையில் இயங்கி வந்த காங்கிரஸுக்கு எதிராக பாஜக இன்று அசுர பலம் பெற்று வலம் வருகிறது. இடைவிடாத உழைப்பால் பிரதமரும், பாஜக கூட்டணி கட்சி தலைவர்களும் இண்டியா கூட்டணி உருவாக்கிய போலி பிம்பத்தை உடைத்தெறிந்துள்ளனர்.

அந்த வகையில் பாஜக கூட்டணியின் வெற்றி எழுதப்பட்டுவிட்டது. அதிகாரப்பூர்வமாக வெற்றி கொண்டாட்டங்களுக்கு இன்றும் 3 நாட்களே உள்ளன.எனவே வாக்கு எண்ணிக்கையின்போது அதிக விழிப்புணர்வுடன் பாஜக கூட்டணி கட்சியினர் இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் மக்களை ஏமாற்றியே அரசியல் செய்யும் கூட்டத்தோடு மோதுகிறோம். ஜூன் 4-ம் தேதி இந்தியாவின் விடியல் என்று சொல்லிக் கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணியின் முடிவு ஆரம்பமாகும்.

பிரதமர் மோடியின் நிலையான ஆட்சிக்கு 11-ம் ஆண்டு வெற்றி தொடக்கமாகவும் அமையும். இண்டியா கூட்டணி வெற்றி பெறாத வெற்று கூட்டணி என்பதை அதன் தலைவர்களே உணர்ந்து விட்டார்கள். அதனால்தான் டெல்லியில் நடைபெறும் ஒரு நாள் கூட்டத்தில்கூட கலந்து கொள்ள முடியாமல் தமிழக முதல்வர் தடுமாறுகிறார். இதுவே இண்டியா கூட்டணி. எனவே மறுபடியும் பிரதமர் மோடியின் தலைமையில் பாரத தேசம் மேலும் வலுவடையும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment