ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் பெற முயற்சி ஏமாந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை முயற்சி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரடிவாவி பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்(வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு நூல் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று அவரும், அவரது மனைவி விஜி(26), மகள் வின்சிலின்(6) ஆகியோர் அவர்கள் வீட்டின் அருகே மயங்கிய நிலையில் கிடந்தனர்.

இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆன்லைன் கடன் செயலி மூலமாக சிறிய தொகை கட்டினால் பெரும் தொகை கடனாக வழங்கப்படும் என்பதை நம்பி ராஜீவ் அவரது நண்பர்களிடம் ரூ.40ஆயிரம் வரை கடன் வாங்கி, ஆன்லைன் செயலியின் வங்கி கணக்கிற்கு செலுத்தி உள்ளார். இந்தநிலையில் திடீரென ஆன்லைன் செயலி முடங்கியது. இதனால் ராஜீவ் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் நண்பர்கள் கடனை திருப்பி கேட்டுள்ளனர். இதன் காரணமாக ராஜீவ் தனது மனைவி, குழந்தையுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆன்லைன் கடன் செயலி மூலம் பணம் பெற வேண்டாம் என போலீசார் பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் பலர் கடன் வாங்கி வருகின்றனர். இந்தநிலையில் பல்லடத்தில் ஆன்லைன் கடன் செயலி மோசடியால் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

Leave a Comment