காங்கிரஸ் சார்பில் கர்நாடக மேல்சபையில் தமிழருக்கு வாய்ப்பு: வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு

கர்நாடக மேல்சபையில் 11 எம்.எல்.சி.களின் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூன்) நிறைவடைகிறது. இதையடுத்து அந்த 11 இடங்களுக்கு வருகிற 13-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சட்டசபையில் உள்ள காங்கிரசின் பலத்தின் அடிப்படையில் அக்கட்சிக்கு 7 இடங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து உத்தேச வேட்பாளர் பட்டியலுடன் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் கடந்த 29-ந்தேதி டெல்லி சென்றனர்.

அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா எம்.பி. ஆகியோருடன் 2 முறை ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் 7 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது முதல்-மந்திரி சித்தராமையாவின் மகன் யதீந்திரா, தற்போது மந்திரியாக உள்ள என்.எஸ்.போசராஜூ, வேணுகோபால், பி.ஆர்.ரமேஷ் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் என்.எஸ்.போசராஜூ ஏற்கனவே எம்.எல்.சி.யாக உள்ளார்.

அதனால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதுபோல் முன்னாள் எம்.எல்.சி.யான பி.ஆர்.ரமேஷ், தமிழர் ஆவார். அவருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை நாளை (சனிக்கிழமை) அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Leave a Comment