100 டன் தங்கம் இங்கிலாந்து வங்கியில் இருந்து இந்தியாவிற்கு வந்தது- முதல் 10 நாடுகளில் இந்தியா

ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக நிதி நிலைமை நிச்சயமற்ற நிலையில் இருக்கும்போது அதில் இருந்து மீளவைக்கும் நம்பகமான சேமிப்பு பொருளாக தங்கம் பார்க்கப்படுகிறது. இதனால் உலக நாடுகள் பலவும் போட்டி போட்டு தங்கத்தில் முதலீடு செய்கின்றன. தங்கத்தை அதிக அளவில் கையிருப்பில் வைத்துக் கொள்வதற்கு ஆர்வம் காட்டுகின்றன.

உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகம் வாங்கி வருகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி சமீப ஆண்டுகளாக அதிக அளவில் தங்கத்தை குவித்து வருகிறது. சமீபத்திய தரவுகளின்படி, மார்ச் மாத இறுதியில், ரிசர்வ் வங்கியிடம் 822.1 டன் தங்கம் இருந்தது. அதில் 413.8 டன் தங்கம் வெளிநாடுகளில் உள்ளன. கடந்த ஆண்டு முழுவதும் ரிசர்வ் வங்கி 16 டன் தங்கத்தை தனது இருப்பில் சேர்த்திருந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 27 டன் தங்கத்தை வாங்கியது.

இந்த நிலையில் இங்கிலாந்து வங்கியில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது. பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளுக்கு, பாங்க் ஆப் இங்கிலாந்து பாரம்பரியமாக களஞ்சியமாக இருந்து வருகிறது. அங்கு தங்கத்தை சேமித்து வைத்துள்ளனர்.

அந்த வங்கியில் இருந்து 100 டன் தங்கத்தை நாட்டிலுள்ள தனது பெட்டகங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. அந்த தங்கம், சிறப்பு விமானம் மூலம் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொண்டு வரப்பட்டது. அந்த தங்கம் மும்பையின் மின்ட் சாலை மற்றும் நாக்பூரில் உள்ள ரிசர்வ் வங்கியின் பழைய அலுவலக கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் தங்கம் கையிருப்பு அதிகரித்து வருவதால், சில தங்கத்தை இந்தியாவுக்குப் பெற முடிவு செய்யப்பட்டது. தற்போது கொண்டு வரப்பட்டு உள்ள100 டன் தங்கம், மார்ச் மாத இறுதியில் நாட்டில் உள்ள கையிருப்பில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காகும். இந்த தங்கத்தை கொண்டு பல மாதங்கள் திட்டமிடல் மற்றும் துல்லியமான செயலாக்கம் தேவைப்பட்டது. நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி, உள்ளூர் அதிகாரிகள் உள்பட அரசாங்கத்தின் பல பிரிவுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டன என்றார்.

உலக அளவில் அதிக தங்கம் கையிருப்பு கொண்டுள்ள முதல் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment