திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி – முதலமைச்சர் திறந்து வைத்தார்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு உபயதாரர் நிதி மற்றும் கோவில் நிதியின் மூலம் பெருந்திட்ட வரைவின்கீழ், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வரிசை முறை, காத்திருப்பு அறை, மருத்துவ மையம், முடிக் காணிக்கை செலுத்தும் இடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, அன்னதானக்கூடம், பக்தர்கள் தங்கும் விடுதிகள், சுகாதார வளாகம், திருமண மண்டபங்கள், பணியாளர் குடியிருப்பு ஆகிய திருப்பணிகளின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 28.9.2022 அன்று தொடங்கி வைத்தார்.

அத்திருப்பணிகளில் 33.25 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட முடி காணிக்கை மண்டபம், வரிசை வளாகம், சுகாதார வளாகங்கள், கலையரங்கம், நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம், ஆகியவை கடந்த 14.10.2024 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றைய தினம் 10 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 52 அறைகளுடன் கூடிய தங்கும் விடுதியினை பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மேலும், ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் கைங்கர்யம் பணியிடத்தில் பணிபுரிந்து வந்த 6 கோவில் பணியாளர்களுக்கு அர்ச்சகர்களாகப் பதவி உயர்வு வழங்கி, அதற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ் ணன், பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அற நிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், தலைமைப் பொறியாளர் பெரியசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காணொலிக் காட்சி வாயிலாக திருச்செந்தூரில் இருந்து இந்து சமய அறநிலைத் துறை கூடுதல் ஆணையர் டாக்டர் சி.பழனி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், கூடுதல் ஆணையர் ஜெயராமன், கோவில் தக்கார் அருள்முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment