ஸ்ரீரங்கம் செக்போஸ்ட் பகுதி கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீர் தேக்க தடுப்பணையில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீரங்கம் செக்போஸ்ட் பகுதி கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலத்தின் அடி பகுதியில் மண் அரிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக ஆற்றில் சிறிய அளவிலான தடுப்பணை கட்டப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தடுப்பணையில் நீர் வழிந்து ஓடுகிறது. இதில் குளிப்பதற்காக ஏராளமான மக்கள் இங்கு வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் இந்த தடுப்பணையின் கிழக்கு பகுதியில் தேங்கிய தண்ணீரில் குளித்த சிறுவன் ஒருவன் அதில் மூழ்கி உயிரிழந்தான். அத்துடன் இந்த தடுப்பணையில் கழிவு நீர் கலக்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கழிவு நீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி ஸ்ரீரங்கம் செக்போஸ்ட் ரவுண்டானா அருகில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். இந்தபோராட்டத்தில் பேசியவர்கள், “தடுப்பணையின் கீழ் உள்ள பெரிய பாறைகள், கற்களை அப்புறப்படுத்தி சிமென்ட் ஸ்லாப்களை அமைக்க வேண்டும். உயிர் பலி வாங்கும் தடுப்பணைக்கு அருகே 30 அடி ஆழமுள்ள ஆகாய தாமரை படர்ந்த குளத்தை உடனடியாக மூட வேண்டும். இதில் மூழ்கி அகால மரணம் அடைந்த மாணவன் சாம் ரோஷனுக்கு உரிய நிவாரண நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும்.
கழிவுநீர் கொள்ளிடம் ஆற்றில் கலப்பதால் நிலத்தடி நீர், கழிவுநீராக முற்றிலும் மாறி விட்டது. கழிவுநீரால் சலவை தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இது நாள் வரை உரிய நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தின் செயல் கண்டிக்கத்தக்கது” என வலியுறுத்தினர்.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீரங்கம் போலீஸார் சொன்ன சமாதானத்தை ஏற்று மறியலை கைவிட்டனர். இந்தப் போராட்டத்துக்கு சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் தர்மா தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் சந்தானம், அழகிரிபுரம் கிளைச் செயலாளர் முத்து ஆகியோர் பேசினர்.