பாஜகவிற்கு வழிவிட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதன் காரணமாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்; தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி.
காலை உணவுத் திட்டம் மூலம் விழுப்புரத்தில் 66,000 மாணாக்கர் பயன் பெற்றுள்ளனர். புதுமைப் பெண் திட்டம் மூலம் விழுப்புரத்தில் 10,000 மாணவிகள் பயனடைந்துள்ளனர். விடியல் பயணம் மூலம் பெண்கள் மாதம் ரூ.1000 சேமித்து வருகின்றனர். பெட்ரோல், பால் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். முண்டியம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலம் விரைந்து கட்டி முடிக்கப்படும். ஏழை மாணவர்கள் உயர்கல்வி பயில மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார் முதலமைச்சர். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் 17 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். தொடர் தோல்வி பயத்தால் அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.
