ஜூலை – 16 பாட்டாளி மக்கள் கட்சி தொடக்க நாள் – எல்லா இடங்களிலும் ஆங்காங்கே கொடியேற்றி இனிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் பெருமிதத்துடன் கொண்டாடுவோம் – ஜி.கே.மணி
தமிழ்நாட்டில் மண் செழிக்க, மக்கள் மேம்பட, மொழிகாக்க, அனைவரின் உரிமைக்காகவும், மேம்பாட்டுக்காகவும் மகத்தான மாபெரும் சக்தி சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்களால் தொடங்கப்பட்டது பாட்டாளி மக்கள் கட்சி.
சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்று அடுத்த நாள் விடியற் காலை வரை நடைபெற்ற பா.ம.க தொடக்க நிகழ்ச்சி தமிழ்நாடு வரலாற்றின் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சமூகநீதியை உயிர் மூச்சுக் கொள்கையாகவும், உண்மை ஜனநாயகம் நிலைக்கவும், ஏற்றத்தாழ்வற்ற சமத்துவம் மலரவும், சகோதர நல்லிணக்க மனித நேயம் பிறக்கவும், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கவும், பிறப்புரிமை பெற்றிடவும், வேறுபாடு இல்லாத சமச்சீர் வளர்ச்சி கண்டிட போன்ற உன்னத நோக்கத்திற்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நேரத்திலும், அதற்கு முன் வன்னியர் சங்கம் தொடங்கிய நேரத்திலும் மருத்துவர் அய்யா அவர்கள் உடன் இருந்தவன் உங்கள் சகோதரன் ஜி.கே.மணி.
மருத்துவர் அய்யா அவர்கள் மக்கள் உரிமைக்காகவும், அவ்வப்போதைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், ஏராளமான போராட்டங்கள் நடத்தப்பட்டு லட்சக்கணக்கானவர்கள் சிறைக்கு சென்று கடுமையான வழக்குகளையும் சந்தித்து தியாகம் செய்தவர்களை உள்ளடக்கியது தான் பாட்டாளி மக்கள் கட்சி என்ற அரசியல் சக்தி.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டு வளர்ச்சி பெறும் நோக்குடன் 234 தொகுதிகளிலும் தொகுதி மாநாடுகள் நடத்தி, அனைத்திலும் பங்கேற்றவர் மருத்துவர் அய்யா அவர்கள். ஆங்காங்கே ஏற்பாடு செய்து நடத்தியது உங்கள் சகோதரன் ஜி.கே.மணியும், ஆங்காங்கே உள்ள பா.ம.க பொறுப்பாளர்களும் செய்தது பெருமைக் கூறியது.
ஒவ்வொரு கிராமத்திலும் கட்சி வளர்ச்சிக்கு கிராம வளர்ச்சி குறித்தும் ஒரு சட்டமன்ற தொகுதியில் ஒரே நாளில் 100 கிராம மாநாடுகள் என திட்டமிட்டு 150 க்கும் மேல் ஒரே நாளில் கிராம மாநாடுகளை நடத்தி காட்டிய சக்தி பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு. மாவட்டங்கள் தோறும் மகளிர் சங்க மது ஒழிப்பு மாநாடு உள்ளிட்ட ஏராளமான மாநாடுகளை, போராட்டங்களை நடத்தி அரசியல் வரலாற்றில் முத்திரை பதித்த கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். பா.ம.க என்றாலே போராட்டங்கள் நடத்தும் கட்சி, மானமும் கொள்கையும் கொண்ட பொறுப்பாளர்கள் செயல்வீரர்களை கொண்ட கட்சி. மருத்துவர் அய்யா அவர்கள் சொல்வேத வாக்கு என்று பொறுப்பாளர்கள் மிகுந்த கட்சி.
அரசியல் கட்சிக்கு மாநில கட்சிகளின் உரிமைக்கும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மிக முக்கியமான இடம் சட்டமன்றம். சட்டமன்றத்தில் செயல்பாடுகள் கட்சிக்கு பெருமை சேர்க்கும் மேம்பாட்டுக்கும் அடித்தளமாகும். அதே போல் தான் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளும் அமையும். நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாதனை பெருமை கூறியது. குறிப்பாக மருத்துவர் அன்புமணி அவர்களின் சுகாதாரத் துறையில் 108 ஆம்புலன்ஸ் திட்டம், புகையிலை ஒழிப்பு போன்ற உன்னத திட்டங்கள், ரயில்வே துறையில் திட்டங்கள் நிறைவேற்றி சாதனை படைத்தது பெருமை கூறியது. சட்டமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மிகப்பெரிய பெருமை உண்டு. மருத்துவர் அய்யா அவர்களின் லட்சியங்களை பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளை சட்டமன்றத்தில் பேசி ஏராளமான சாதனை படைத்து ஜி.கே.மணி என்பதை மிகுந்த அடக்கத்துடன் எண்ணிப் பார்க்கிறேன். சட்டமன்றத்தில் முழுமையாக வாதாடி நிறைவேற்றப்பட்ட ஒரு சிலவற்றை குறிப்பிடுகிறேன். தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான குடும்பங்களை சீரழித்துக் கொண்டு வந்த லாட்டரி சீட்டு ஒழிப்பு, நுழைவுத் தேர்வு ரத்து, சமச்சீர் கல்வி நடைமுறை, தாய்மொழி தமிழ் வழிக் கல்வி சட்டம், காவிரி ஆறு, பாலாறு, முல்லைப் பெரியாறு, ஆகியவற்றில் தமிழ்நாட்டின் உரிமை காக்க, காலங்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு கலை &அறிவியல் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக், அரசு ITI போன்ற அரசு கல்லூரிகளை மீண்டும் துவங்கப்பட்டதற்கு காரணம் சட்டமன்றமே.
வேலூர், ஈரோடு, திருப்பத்தூர், தூத்துக்குடி, ஓசூர் போன்ற புதிய மாநகராட்சிகள் உருவாக்கம். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், அரியலூர், போன்ற புதிய மாவட்டங்கள் உருவாக்கியது. போன்ற ஏராளமான சாதனைகளை சட்டமன்றத்தில் சாதித்து காட்டியது உங்கள் சகோதரன் ஜி.கே.மணியும் பா.ம.க சட்டமன்ற உறுப்பினர்கள். இலங்கை தமிழ் பிரச்சனை காவேரி பிரச்சனை, மது ஒழிப்பு , விவசாயிகள் மேம்பாட்டுக்கான திட்டங்கள், நீர் பாசன திட்டங்கள், கல்வி மேம்பாடு, குடிசையில்லா தமிழ்நாடு உருவாக்கும் திட்டம், வீடு தோறும் கழிப்பறைகள் வசதி, இட ஒதுக்கீட்டு கோரீக்கு தனியாக சட்டமன்றத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் ஓரு நாள் தனியாக கூட்ட செய்து வாதாடி, இட ஒதுக்கீட் குளறுபடிகளை, கோளாறுகளை கலைந்து வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்றும், எல்லா சமுதாய மக்களுக்கும் உரிய பங்களிப்பு கிடைத்திட தொகுப்பு இட ஒதுக்கீடு முறை வழங்க வேண்டுமென, இன்று நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு அளவை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டுமென சட்டமன்றத்தில் கடுமையாக உருக்கமாக வலியுறுத்தினேன். (சில காலம் கழித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது) அதன் மூலம் MBC-க்கு பின்னடைவு காலியிடங்களை நிரப்ப வழிவகை செய்தது.
டெல்டா மாவட்ட பிரச்சனைகள், மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என அரசு கொள்கை முடிவு எடுக்க செய்தது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இவ்வாறு அடுக்கிக் கொண்டேபோகும். ஏராளமான சாதனைகளை அதேபோலவே அதிக அளவில் உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி சாதனை குறிப்பிடத்தக்கது.
மருத்துவர் அய்யா அவர்களுடன் வன்னியர் சங்க காலந்தொட்டு இன்று வரை பாதை மாறாமல் இருந்து வருபவன். பல்வேறு இடங்களிலும் இருந்து பல்வேறு கோணங்களில் இருந்து உயர்ந்த வாய்ப்புக்காக பலமுறை அழைப்பு வந்த நேரத்தில் அவற்றை எல்லாம் தட்டி கழித்து பதவி ஆசைக்கு அலையாமல் வேறு எங்கும் செல்லாமல் மருத்துவ அய்யா அவர்களுடனே பயணித்து கொண்டு இருப்பன் உங்கள் சகோதரன் ஜி.கே.மணி. வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து கடந்து வந்த பாதையை எண்ணிப் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது. இடையிடையே கட்சிக்கு ஏற்பட்ட சோதனைகள், நெருக்கடிகள், வேதனைகள், இடையிடையே பாட்டாளி மக்கள் கட்சியை பிளவுபடுத்தும் முயற்சிகள் அவ்வப்போது ஏற்படும். தடைகள், முட்டுக்கட்டைகள் இவற்றையெல்லாம் சந்தித்து சமாளித்து மருத்துவர் அய்யா அவர்களுக்கு பக்கபலமாக உறுதுணையாக இருந்து வருபவன் ஜி.கே.மணி. இடையில் 25 ஆண்டுகாலம் கட்சித் தலைமை பொறுப்பில் இருந்து மருத்துவர் அய்யா அவர்களுக்கும், சின்ன அய்யா மருத்துவர் அன்புமணி அவர்களுக்கும் நமது கட்சியினர் அனைவருக்கும் உண்மையாகவும், விசுவாசமாகவும், நேர்மையாகவும், எளிமையாகவும், பந்தா இல்லாமல், பகட்டு தன்மை இல்லாமல், அடக்காத்துடன், சகோதரனாக,மனிதநேயம் உள்ளவனாக நடந்து கொண்டு வந்தவன் ஜி.கே.மணி என்ற கடந்துவந்த பாதையை எண்ணி பார்க்கிறேன்.
சமூகநீதிக்காவலர் அயராத உழைக்கும் உறுதியான கொள்கையில் அசாத்திய துணிச்சலும் தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் பெரிய சக்தியாக நிலைத்திருக்கிறது. இதற்காக மருத்துவர் அய்யா அவர்களுடன் ஆரம்பகாலம் முதல் இன்று வரை மருத்துவர் அய்யா அவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் பக்க பலமாகவும், அசைக்க முடியாத தூண்களாகவும், நாடிகளாகவும், நரம்புகளாகவும், வேர்கள் ஆகவும், விழுதுகளாகவும், கொள்கை வாதிகளாகவும், செயல் வீரர்களாகவும் எல்லோரும் உறுதியாக இருப்பதால் தான் பாட்டாளி மக்கள் கட்சி அசைக்க முடியாத சக்தியாக நிலைத்திருக்கிறது.
ஆண்டுதோறும் பொது நிதிநிலை அறிக்கை (மாதிரி பட்ஜெட்) வேளாண் நிதிநிலை அறிக்கை (விவசாய தனி பட்ஜெட்) போட்டு வருகிற வித்தியாசமான கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. இதை முதல் ஆண்டில் தயாரிக்கும் போது நான் (ஜி.கே.மணி) மிகவும் சிரமப்பட்டு அரசின் ஒவ்வொரு துறையிலும் புள்ளிவிவரங்களை சேகரித்து தயாரித்து மருத்துவர் அய்யா அவர்களால் வெளியிட செய்தேன். அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுவது கூட்டு முயற்சியுடன் எளிதானது.
மருத்துவர் அய்யா அவர்களால் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து அமைப்புகள், அனைத்து அணிகள் ஆகியவற்றில் செயல்பட்டு வரும் உங்கள் ஒவ்வொருவரின் கடுமையான உழைப்பையும், உங்களுக்கு ஏற்பட்ட சோதனைகளையும், வேதனைகளையும், உங்களின் தியாகங்களையும், நெருக்கடிகளையும் எண்ணிப் பார்க்கிறேன். தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்ட வாரியாக ஒவ்வொருவரின் முகங்களை மனக்கண்ணில் பார்க்கிறேன். உங்களின் பேச்சுகளை உள்ளதால் உணர்கிறேன். கடந்த கால ஒவ்வொருவரின் செயல்பாடுகளை எண்ணி பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு பகுதிகளுக்கும் நான் நேரில் வந்து உங்களோடு சேர்ந்து நடத்திய செயல்பாடுகளை எல்லாம் கட்சி தொடங்கிய இந்த நல்ல நாளில் எண்ணிப் பார்க்கிறேன். நீங்களும் நானும் சகோதர உணர்வோடு, உங்களுடன் கடிந்து கொள்ளாமல், மனம் கோணாமல் கட்சிப் பணியாற்றியதை உள்ளுணர்வோடு எண்ணிப் பார்க்கிறேன். கடந்து வந்த காலங்கள் கட்சி பணியாற்றிய விதங்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் கட்சி தொடங்கிய 35 ஆண்டுகள் கடந்து 36 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நல்ல நாளில் நாம் அனைவரும் பெருமை அடைவோம். ஒவ்வொருவரும் அவரவர் பகுதிகளில் ஆங்காங்கே இருந்தாலும் நமது சகோதரர்கள், சகோதரிகள் வீரமிக்க தம்பிகள் நம் அனைவரின் உள்ளங்களும் ஒருவரை ஒருவர் எண்ணிப் பார்க்கும் நாள் ஜூலை 16.
அன்பு சகோதரர்கள், சகோதரிகள் வீரம் எழுச்சியும் மிக்க தம்பிகள் அனைவருக்கும் உங்கள் சகோதரன் ஜி.கே.மணியின் இதயங்கனிந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், நன்றியையும் ஒவ்வொருவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லா வளமும், எல்லா நலனும் பெற்று, உடல் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும், பெரும் புகழுடனும், நீங்களும் உங்கள் குடும்பமும் நலமுடன் வாழ இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்…
நன்றி, வணக்கம்.