தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியாகியிருக்கும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு இன்று முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ளார். அதன்படி, மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு 94.03% விகிதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92.37% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும்!
இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.
அன்பில் மகேஸ்: தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகெஸ் பொய்யாமொழி, “பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். மதிப்பெண்கள் குறைவாக பெற்று உடனடித் தேர்வுகள் எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் தேர்வுகளை எதிர்கொள்ளவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வெற்றி பெற்ற மாணவர்கள் என்றில்லாமல் தேர்வு எழுதிய அனைத்து மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்துக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு துணை நிற்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்: “தமிழகத்தில் இன்று வெளியாகியிருக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், வெற்றி பெற்று வாழ்க்கையின் அடுத்தகட்ட உயர்கல்வியை நோக்கி பயணிக்க தயாராகியிருக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட மாணவ, மாணவியர்கள் தேர்வின் முடிவுகளை வாழ்க்கையின் மதிப்பீடுகளாக கருதாமல், விரைவில் நடைபெற இருக்கும் துணைத்தேர்வுகளை மனம் தளராமல் எதிர்கொண்டு, வெற்றிபெற்று வருங்காலத்தில் சிறந்து விளங்க எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.