திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை பெருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த கிருத்திகை தினத்தில் விரதம் இருந்தால் முருகன் நம் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பது ஐதீகம்.
முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த நாள் கிருத்திகை ஆகும். அதிலும் மாதந்தோறு் கிருத்திகைகள் வந்தாலும் ஆண்டுக்கு 3 முறை வரும் கிருத்திகைகள் மிகவும் முக்கியமானதாகும். உத்திராயன காலத்தின் தொடக்க மாதமான தை மாதத்தில் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை தீபம், தட்சிணாயன காலத்தின் தொடக்கமான ஆடி மாதம் வரும் ஆடி கிருத்திகை ஆகியவை ஆகும்.
இந்த 3 கிருத்திகைகளில் ஆடி கிருத்திகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடிக் கிருத்திகை அன்று முருகப் பெருமானின் அறுபடை வீடுகள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.
இந்த நாளில் பலவிதமான காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் முருகப் பெருமானை வழிபட்டு பக்தர்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள். ஆடிக் கிருத்திகை அன்று முருகனுக்கு பால் அபிஷேகம் செய்யப்படும். இதற்காக பக்தர்கள் பால் குடம் ஏந்தி வருவது வழக்கம்.
இந்த ஆண்டு ஜூலை 29ஆம் தேதியான இன்றைய தினம் ஆடிக் கிருத்திகை விழா திருத்தணியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.