பாஜக பிரமுகர் கொலை குற்றவாளி மீது போலீசார் துப்பாக்கி சூடு

சிவகங்கையை அடுத்த வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் பா.ஜ.க கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்ற போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர். நடுவழியில் திடீரென வழிமறித்த மர்ம கும்பல் செல்வக்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.

பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், செல்வக்குமாரை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி, உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் டிஎஸ்பி சாய் சவுந்தர்யன் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசியல் பிரமுகர் வெட்டி கொல்லப்பட்டது, உறவினர்கள் போராட்டம் என தொடர்ந்து அந்த பகுதியில் பதற்ற சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போலீசார் குற்றவாளியை தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் பாஜக மாவட்ட கூட்டுறவு பிரிவு செயலாளர் செல்வகுமார் கொலை வழக்கில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது காவலரை தாக்கி விட்டு தப்ப முயன்ற வசந்த் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

குற்றவாளி தாக்கியதில் காயமடைந்த சார்பு ஆய்வாளர் பிரதாப் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படுகாயம் அடைந்த காவலர் மற்றும் குற்றவாளி சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment