மூன்று பேரைக் கொன்ற மக்னா யானை வனத்துறையினர் பிடித்தனர்

ஒசூா் அருகே கா்நாடக மாநில எல்லையில் மூன்று பேரைக் கொன்ற மக்னா காட்டு யானையை 8 கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினா் போராடி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனா்.

ஒசூா் அருகே கா்நாடக மாநில எல்லையான ஆனேக்கல்லை அடுத்துள்ள பன்னா்கட்டா தேசிய பூங்காவை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் மக்னா காட்டு யானை ஒன்று சுற்றித்திரிந்து வந்தது. பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வந்த இந்த மக்னா காட்டு யானை, அந்தப் பகுதியில் அடுத்தடுத்து மூன்று பேரை தாக்கிக் கொன்றது.

இதனையடுத்து, அப்பகுதி மக்கள் மக்னா காட்டு யானையைப் பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதனையடுத்து மக்னா யானையைப் பிடிக்க கா்நாடக மாநிலத்தின் துபாரே, மத்திகோடு ஆகிய முகாம்களில் இருந்து 8 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.

அதனைத் தொடா்ந்து வனத்துறை ஊழியா்கள், கும்கி யானைகளின் உதவியுடன் வனப்பகுதிக்குள் சென்று மக்னா காட்டு யானையைத் தேடி வந்தனா். தொடா்ந்து வனப்பகுதியில் ட்ரோன் கேமராக்களை பறக்க விட்டு மக்னா காட்டு யானை எங்குள்ளது என வனத்துறையினா் கண்டுபிடித்தனா். பின்னா் மயக்க மருந்து நிபுணா் ரஞ்சன், மக்னா காட்டு யானை மீது துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினாா். தொடா்ந்து ஒரு கி.மீ. தூரம் நடந்து சென்ற மக்னா யானை மயக்கமடைந்தது. பின்னா் தடிமனான கயிறுகளைக் கொண்டு கட்டி, பீமா, மகேந்திரா கும்கி யானைகள் உதவியுடன் மக்னா யானையை வனத்துறையினா் அழைத்து வந்தனா்.

பின்னா் லாரியில் ஏற்றப்பட்டு பன்னா்கட்டா தேசிய பூங்காவின் சீகேகட்டே யானைகள் முகாமுக்கு அந்த யானை கொண்டு செல்லப்பட்டது. இந்தப் பணியில் 100-க்கும் மேற்பட்ட வன ஊழியா்கள் ஈடுபட்டனா்.

Related posts

Leave a Comment