புதுச்சேரி.செப்.16-புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகரைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 9 வயது மகள் கொலைசெய்யப்பட்டு, கழிவுநீர்க் கால்வாயில் சாக்கு மூட்டையில் வீசப்பட்டிருந்தாள்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், சோலை நகரைச் சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன்(56) ஆகியோரை கைது செய்தனர். வீட்டின்முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, சற்று தூரத்தில் உள்ளவிவேகானந்தன் வீட்டுக்கு கருணாஸ் அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரும், விவேகானந்தனும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதில் மூச்சுத் திணறி மயங்கி விழுந்த சிறுமியை கொலை செய்து, கை, கால்களை கட்டி, உடலை வேட்டியில் மூட்டையாகக் கட்டி, வீட்டுக்கு பின்புறமுள்ள கழிவுநீர்க் கால்வாயில் வீசியது விசாரணையில் தெரியவந்தது..
இதனையடுத்து கருணாஸ் (வயது19) மற்றும் விவேகானந்தன் (57) ஆகியோர் கைது செய்யப்பட்டு புதுச்சேரி காலாப்பட்டு மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது சிறுமியை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரான விவேகானந்தன் சிறை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதிகாலையில் கழிவறைக்கு சென்ற விவேகானந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை செய்துகொண்ட விவேகானந்தன் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காலாப்பட்டு ஜெயிலில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகளை ஒரே அறையில் அடைத்து வைப்பது வழக்கம்.
ஆனால் அவர்களோடு சேர்த்து அடைத்து வைத்தால் சிறுமி கொலை குற்றவாளிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கருதியதால், புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் விவேகானந்தனும், கருணாசும் தனி அறையில் அடைக்கப்பட்டனர். என்பது குறிப்பிடதக்கது.