இந்தியன் வங்கி நடத்தும் உள்ளூர் வங்கி அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பத்திருந்த தமிழக தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கியில் காலியாகவுள்ள 300 உள்ளூர் வங்கி அலுவலர் பதவிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது.
ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை விண்ணப்பத்துடன் ரூ. 1,000 தேர்வுக் கட்டணமாக பெறப்பட்ட நிலையில், வருகின்ற 10-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், தேர்வர்களுக்கான நுழைவுச் சீட்டு கடந்த வாரம் வெளியான நிலையில், தமிழக தேர்வர்களுக்கு ஹைதராபாத், பெங்களூரு போன்ற வெகு தொலைவில் உள்ள வெளி மாநிலங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வுக்கு அடுத்த நாள், ஆயுதப் பூஜை தொடர் விடுமுறை வருவதால், பொதுப் போக்குவரத்து சேவைகள் அனைத்திலும் முன்பதிவு இருக்கைகள் நிரம்பிவிட்டன.
இதனால், தமிழக மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுத முடியாத சூழலை இந்தியன்
வங்கி உருவாக்கியுள்ளதாக தேர்வர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்
இதுதொடர்பாக, இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு பெங்களூரு, ஹைதராபாத், மைசூரு போன்ற பிற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறைகள் அக். 11 மற்றும் 12ஆம் தேதி வருகின்றது. மேலும், வங்கிப் பணியாளர் தேர்வு 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், வெளிமாநிலங்களில் தேர்வு மையம் போடப்பட்டுள்ளது தேர்வர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்துவதாகவும், பெரும் சோதனையில் தள்ளப்படுவதாகவும் உள்ளது. அதனால், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் உள்ள மையங்களை ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.