வீராணம் ஏரி நீர் வரத்து 46 அடியை எட்டியது

வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் கல்லணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் கீழணையின் மொத்த நீர்மட்டமான 9 அடியில் தற்போது அணை 8.5 அடியை எட்டியது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வருவதாலும், தொடர் மழை காரணமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் தற்போது கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் கிராம மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை சேமிக்கும் வகையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீராணம் ஏரியில் தண்ணீரை சேமித்து வருகின்றனர்.

வீராணம் ஏரியில் 47.5 அடி அளவிற்கு தண்ணீர் இருப்பு வைத்துக் கொள்ளலாம். அதன்படி ஏற்கனவே 44 அடி தண்ணீர் இருந்து வந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரில் வீராணம் ஏரிக்கு 2 அடி தண்ணீர் நிரப்பி தற்போது 46 அடி தண்ணீர் கொள்ளளவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் வீராணம் ஏரியிலிருந்து வடவாறு வழியாக சேத்தியாத்தோப்பு அணைக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு தற்போது 7.5 அடி முழு கொள்ளளவு எட்டப்பட்டு உள்ளது.

இதன் மூலம் சேத்தியாதோப்பு அணையில் இருந்து 3வாய்க்கால் வழியாக பரங்கிப்பேட்டை பகுதிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகின்றது. இதன் மூலம் அந்த பகுதியில் விவசாய பணிகளுக்கு தண்ணீர் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் தொடர் மழை காரணமாக ஆறுகள், ஏரிகள் போன்றவற்றை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

Leave a Comment