கோவை அருகே உள்ள கோவைப்புதூரில் பாலவிநாயகர் மற்றும் அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.
நேற்றுமுன்தினம் இரவு பூஜை முடிந்த பின்னர் பூசாரி கோவிலை பூட்டி விட்டுச்சென்றார். மறுநாள் காலையில் அவர் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தார். அங்கு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருந்தது.
அதேசமயம் உண்டியல் அருகே ஒரு வாலிபர் போதையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். உடனே பூசாரி, கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் அங்கு ஏராளமானோர் திரண்டனர். தூங்கிக் கொண்டிருந்த வாலிபரை தட்டி எழுப்பி அவரிடம் விசாரித்தனர்.
கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட வந்ததாகவும், பணத்தை திருடிவிட்டு போதையில் அங்கேயே தூங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அந்த நபரை பொதுமக்கள் குனியமுத்தூர் போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவரது பெயர் சின்னையன் (வயது 42), புதுவை மாநிலம் காரைக்கால் நெடுங்காடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
அவர் மீது புதுவை மாநிலத்தில் திருட்டு வழக்குகள் உள்ளன. இதனால் அங்கிருந்து வெளியேறி கோவைப்புதூருக்கு வந்து வாடகை வீட்டில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு கோவில் அருகே வந்ததும் பழைய நினைவுகள் வந்து உண்டியலை உடைத்து பணம் திருட முடிவு செய்துள்ளார். உடனே இரும்பு கம்பியை கொண்டு கோவில் கதவை உடைத்துள்ளார். உள்ளே சென்றபின் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.8,250 பணத்தை திருடியிருக்கிறார். அப்போது மழை பெய்துள்ளது. இதனால் மழை நின்றதும் வெளியே செல்லலாம் என நினைத்து உண்டியல் அருகே படுத்துள்ளார். ஆனால் அங்கு அயர்ந்து தூங்கி விட்டதாக சின்னையன் தெரிவித்தார்.
கோவில் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் சின்னையன் கைது செய்யப்பட்டார். அவர் திருடிய உண்டியல் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சின்னையன் ஜெயிலில் அடைக்கப்பட்டார். திருடவந்த இடத்தில் கொள்ளையன் தூங்கியதால் பிடிபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.