சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 26-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் கட்சியின் அகில இந்திய தலைவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதையொட்டி சேலத்தில் அதன் லோகோவை அறிமுகப்படுத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் லோகோவை வெளியிட்டு பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது,
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் முக்கியமான தேர்தல். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்று திரும்ப திரும்ப உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல தலைவர்களும் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். கூட்டணியை பலப்படுத்தவும் முயற்சி மேற்கொள்கிறார்கள்.
பா.ஜ.க. விரும்பும் கூட்டணி பலமான கூட்டணியாக அமையும், எதிரிகளால் எதிர்கொள்ள முடியாத கூட்டணியாக அமையும் என்று கற்பனையாக பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர பாரதிய ஜனதா கூட்டணி கருவே உருவாகவில்லை. ஆனால் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகிறார்கள்.
தி.மு.க. கூட்டணி கட்சிகளை உடைத்து அங்கிருந்து பல கட்சிகள் எங்களுக்கு வருவார்கள் என்று பா.ஜ.க. தலைவர்களும் சொல்கிறார்கள்.
தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. தமிழக அரசியல் வரலாற்றில் எந்த கூட்டணியும் இவ்வளவு நாள் நீடித்தது கிடையாது.
இந்த கூட்டணி தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல, கொள்கைக்காக அமைந்த கூட்டணி. 2 பாராளுமன்றத் தேர்தலை வெற்றிகரமாக சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம். தி.மு.க. கூட்டணி ஒரு போதும் உடையாது.
தி.மு.க. கூட்டணியை உடைத்து அவர்கள் கூட்டணிக்கு சில கட்சிகள் வருவார்கள் என பா.ஜ.க. கூறிக்கொண்டிருக்கிறது.
முருகனை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது பா.ஜ.க. முருகன் மாநாட்டால் பா.ஜ.க. வெற்றிபெற முடியாது. நெருக்கடி நிர்பந்தத்தின் பேரில் அ.தி.மு.க. வலுக்கட்டாயமாக கூட்டணியில் சேர்க்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. மடியில் கனம் இருந்ததால் பா.ஜ.க.வின் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
