மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி நீரை தராத கர்நாடகா அரசு- தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் முதல்வர் அறிவிப்பு

முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், “காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு அளித்த இறுதி தீர்ப்பையும், உச்ச நீதிமன்றத்தின் கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பையும் செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அந்த அமைப்புகள் 2018 ஜூன் முதல் செயல்பட்டு வருகின்றன.

தற்போதைய தென்மேற்கு பருவமழைக் காலத்தில், கர்நாடக அணைகளின் நிலவரத்தை கருத்தில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர்மேலாண்மை ஆணையம் ஆகியவை தமிழகத்துக்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரை கணக்கிட்டு, ஜூலை 12 முதல் 31-ம் தேதி வரை தினசரி ஒரு டிஎம்சி விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்த ஆணையை செயல்படுத்த காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி நீரை விடுவிக்காத கர்நாடக அரசின் செயல் உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாகும். இவ்வாறு தமிழகத்துக்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழக அரசு ஒருபோதும் ஏற்காது.

காவிரி நீரைப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டப்பேரவை கட்சித்தலைவர்களின் கூட்டத்தை நாளை காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்ட உத்தரவிட்டுள்ளேன். கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைள் குறித்து முடிவெடுக்கப்படும்.” என்று தெரிவித்திருந்தார்.

Related posts

Leave a Comment