ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே அந்த நிலத்தின் உரிமையாளர் பிரகாஷ் கொடுத்த புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர், பிரவீன் உள்ளிட்டோர் மீது வாங்கல் போலீசார் கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த கொலை மிரட்டல் வழக்கு தொடர்பாக திருச்சி சிறையில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீசார் கைது செய்தனர். இதைதொடர்ந்து, திருச்சி மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீசார் வேனில் கரூருக்கு அழைத்து வந்தனர்.
இந்நிலையில், 2 நாட்கள் சிபிசிஐடி காவல் முடிந்து நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மேலும் ஒரு நாள் போலீஸ் காவல் நீட்டித்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த நீதிபதியிடம் போலீசார் அனுமதி கேட்டனர்.
போலீசார் அனுமதி கேட்ட நிலையில், ஒரு நாள் மட்டும் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார்.