தமிழ்நாட்டில் பட்டியலினத்தவரில் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கி கலைஞர் ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது.
பட்டியலினத்தவருக்குள் மிகவும் பின்தங்கிய அருந்ததியினருக்குஉள்ஒதுக்கீடு வழங்க மு.க.ஸ்டாலின் அப்போது முன்மொழிந்தார். இதனையடுத்து அருந்ததியினருக்கு 2009-ல் திமுக ஆட்சியில் வழங்கிய 3% உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது.
அருந்ததியினருக்கு 3% இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை 2020 ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அப்போது தமிழ்நாடு அரசின் அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லுபடி ஆகும் என்று உச்ச நீதிமன்றம்
தீர்ப்பு அளித்தது. ஆனாலும், ஏற்கனவே உள் ஒதுக்கீடு அனுமதிக்க கூடாது என்று ஆந்திரா வழக்கில் 2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியிருந்தனர். இதன் காரணமாக இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது. இதேபோன்று பஞ்சாப், ஹரியானா மாநில வழக்குகளும் ஏழு நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா மாநில அரசுகளின் உள் இடஒதுக்கீடு சட்டங்கள் தொடர்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், பட்டியலின, பழங்குடியினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. 7 நீதிபதிகளில் பேலா திரிவேதி மட்டுமே மாறுபட்ட கருத்தை தெரிவித்தார். மற்ற 6 நீதிபதிகளும் உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர்.
உச்ச நீதிமன்ற அமர்வின் தீர்ப்பில், பட்டியலினத்தவரின் உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் உள்ஒதுக்கீடு, அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவை மீறவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அருந்ததியினருக்கு 2009-ல் திமுக ஆட்சியில் வழங்கிய 3% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு அனுமதி அளித்துள்ளது.