முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாணயம் இன்று வெளியிடப்படவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது:
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவரான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும்அரசியல் தலைவராக, சமூகம், கொள்கை மற்றும் அரசியல் குறித்த ஆழமான புரிதலை அடிக்கோடிட்டுக் காட்டி, பல தசாப்தங்களாக மக்களால் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வராக நமது நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்தவர் கலைஞர் கருணாநிதி.
பன்முகத் திறமைகளை உடையவராகத் திகழ்ந்த கலைஞர் கருணாநிதி, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை வளர்க்க, அவர் எடுத்த முயற்சிகள் இன்றும் மக்களால் நினைவுகூரப்படுகின்றன.
அவரது இலக்கியத் திறனானது அவரது படைப்புகளால் ஒளிர்கிறது மற்றும் அவருக்கு ‘கலைஞர்’ என்ற பட்டத்தையும் பெற்றுத் தந்தது.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடயிருப்பது, அவரின் நினைவைப் போற்றும் விதமாகவும், அவரால் நிலைநிறுத்தப்பட்ட லட்சியங்களைப் போற்றும் விதமாகவும் அமைந்துள்ளது. மிக முக்கியமான தருணம் இது.
இந்திய அரசியல், இலக்கியம் மற்றும் சமூகத்தில் ஓர் உயர்ந்த ஆளுமையாக திகழ்ந்தவர் கலைஞர் கருணாநிதி. அவர் எப்போதும் தமிழகத்தின் வளர்ச்சி, நாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றில் அதிக நாட்டம் கொண்டிருந்தார்.
இந்த முக்கியமான தருணத்தில், அவருக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்துகிறேன்
2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நாம் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லும்போது கலைஞர் கருணாநிதி போன்ற தலைவர்களின் தொலைநோக்குப் பார்வையும், சிந்தனைகளும் நமது தேசத்தின் பயணத்தை வடிவமைக்க உதவும்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா வெற்றியடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து கடிதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் நன்றி தெரிவித்துள்ளார்.