சென்னை கலைவாணர் அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கிய விழாவில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். ரூ.100 முகமதிப்பு கொண்ட அந்த நாணயத்தில் ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
பின்னர் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,
’’சொல்ல முடியாத மகிழ்ச்சியின் உள்ளேன். நா நயம் மிக்க தலைவருக்கு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை நாம் கொண்டாடினோம். இன்று இந்தியாவே கருணாநிதியை கொண்டாடுகிறது.
கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிட என் முதல் தேர்வாக இருந்தது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்தான். பல அரசியல் மாறுமாடுகள் இருந்தாலும், அனைத்துக் கட்சியினருடனும் இணக்கமாக உள்ள ராஜ்நாத் சிங், கருணாநிதி நாணயத்தை வெளியிட சிறந்த தேர்வு. நாணயத்தை வெளியிட ராஜ்நாத் சிங்கை அனுப்பிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.
சுதந்திர நாளன்று மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத்தந்தவர் மு. கருணாநிதி. கார்கில் போரின்போது அதிக தொகையை வசூலித்துக் கொடுத்தவர் கருணாநிதி. மத்தியில் பல திறமையான தலைவர்கள் அமையக் காரணமாக இருந்தவர். தமிழகத்தில் நடப்பது கட்சியின் அரசல்ல, ஒரு இனத்தின் அரசு’’ என மு.க. ஸ்டாலின் பேசினார்.
தொடர்ந்து பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “கருணாநிதி துணிச்சல் மிக்க தலைவர். தலைசிறந்த நிர்வாகி. 1960 முதல் தற்போது வரை ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக திமுகவை வளர்த்தவர். விளிம்புநிலை மக்களுக்கு தரமான வாழ்க்கை நிலையை கொண்டுவந்தவர். 1989லேயே மகளிருக்கான சுய உதவிக் குழுக்களை கொண்டுவந்தவர். பாலின சமத்துவம் பேணும் வகையில் மகளிர் சுய உதவித் திட்டத்தை அவர் கொண்டு வந்தார். பல்வேறு தேசிய கட்சிகளுடன் நல்லுறவைப் பேணியவர். தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் வரைபடத்தை உருவாக்குவதில் கருணாநிதிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. கூட்டாட்சி தத்துவத்துக்கு பாடுபட்ட கருணாநிதி நாட்டின் நலனுக்காகவும் குரல் கொடுத்தவர்.” என்று புகழாரம் சூட்டினார்.

நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்கு முன்னதாக, சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்ற அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அங்கு கருணாநிதி அருங்காட்சியகத்தையும் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.