புதுச்சேரி.ஆக.24-முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, 100 இளம் பேச்சாளர்களைக் தேர்வு செய்யும் பொருட்டு, திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், திமுக இளைஞர் அணிச் செயலாளர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கலைஞரின் “என் உயிரினும் மேலான”..! என்ற தலைப்பில் தொடங்கி என்றென்றும் பெரியார். ஏன்?. அண்ணா கண்ட மாநில சுயாட்சி, கலைஞரின் தொலைநோக்குப் பார்வை, மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர், கலைஞர் – நவீன நாட்டின் சிற்பி, இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், சமூக நீதிக் காவலர் கலைஞர், தமிழ்நாடு குடும்பங்களில் தி.மு.க., போன்ற பல்வேறு தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடத்திட அறிவுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் புதுச்சேரி மாநில இளைஞர் அணி சார்பில் பேச்சுப் போட்டி நடத்துவது குறித்த அவசர ஆலோசனைக் கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், எம்.எல்.ஏ., அவர்கள் தலைமை வகித்தார்.
மாநில கழக அமைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு பேச்சுப் போட்டிகளை எப்படி நடத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
கூட்டத்தில், புதுச்சேரி மாநிலத்தில் 26–ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 4.00 மணிவரை புஸ்சி வீதியில் உள்ள ரோஷ்மா திருமண நிலையத்தில் நடத்துவது என்றும் இப்போட்டியில் புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த 300 மாணவ, மாணவியர்கள் பங்கேற்க வைப்பது என்றும் இப்போட்டிக்கு தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படும் நிர்வாகிகள் நடுவர்களாக இருந்து சிறப்பாக பேசும் மாணவர்களை தேர்வு செய்து தமிழ்நாடு அளவில் நடைபெறும் பேச்சுப் போட்டியில் பங்கேற்க செய்து அவர்கள் மாநில அளவில் வெற்றி பெற வைத்து புதுச்சேரிக்கு பெருமை சேர்க்க வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், மாநில மாணவர் அணி அமைப்பாளர் எஸ்.பி. மணிமாறன், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு. மோகன்தாசு, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் டாக்டர் நித்திஷ், முகிலன், ரெமிஎட்வின், உத்தமன், தாமரைக்கண்ணன், கிருபாசங்கர், அகிலன், தமிழ்பிரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.