தமிழ்க் கடவுள் முருக பெருமானின் 3-ம் படை வீடான பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று தொடங்கியது.
பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, மடாதிபதிகள், ஆதீனங்கள், நீதியரசர்கள், ஆன்மீக சொற்பொழிவாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் முப்பரிமாண பாடலரங்கம், சிறப்பு புகைப்பட கண்காட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தது. குடவரைக்கோவில் போன்ற அரங்கில் அமைக்கப்பட்டு இருந்த இதனை ஏராளமான பக்தர்கள் ரசித்தனர்.
முதல் அரங்கில் மாநாட்டு நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
2-ம் நாள் நிகழ்ச்சி முதல் நாள் மாநாட்டில் 300 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இன்று 800 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மொத்தம் 1300 ஆய்வறிக்கைகள் இறுதி செய்யப்படுகிறது.
2-ம் நாளான இன்று காலை திருவேல் இறைவன் தீந்தமிழர் இசையுடன் விழா தொடங்கியது. முருகனும் பரதமும் என்ற தலைப்பில் வித்யா வாணி சுரேஷ் மற்றும் மகிதா சுரேசின் கலை நிகழ்ச்சி நடந்தது. இசைத் தென்றல் சம்மந்தம் குருக்களின் திருப்புகழ் தேனிசை, டி.எம். சவுந்தர்ராஜனின் மகன் பால்ராஜின் இறை வணக்கம் ஆகியவை நடைபெற்றன. திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி வரவேற்றா
அமைச்சர் அர.சக்கரபாணி தொடக்க உரையாற்றினார். கோவை கவுமாரமடம் குமரகுரு சுவாமிகள் ஆசியுரை நிகழ்த்தினார். சத்தியவேல் முருகனார் சிறப்புரையாற்றினார். மொரிசியஸ் தமிழக கோவில்கள் கூட்டமைப்பு தலைவர் செங்கண்குமரா வாழ்த்துரை வழங்கினார். நீதியரசர் சுரேஷ்குமார் சிறப்புரையாற்றினார். முன்னதாக மாநாட்டின் 2-ம் நாள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 39 மாதங்களில் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வரை கோவில்களை புனரமைக்கவும், ஆன்மீக அன்பர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் முதலமைச்சர் மு.க.
ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை குழு கூட்டத்தை கூட்டி அதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசு அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கிய தீர்மானமாக அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டு அதனை பழனியில் நடத்தவும் தீர்மானித்தோம்.
அதன்படி பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக 11 குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் 4 நீதியரசர்கள், அனைத்து ஆதீனங்களும் கலந்து கொண்டனர். பல்வேறு ஆன்றோர்கள், சான்றோர்கள், தமிழ் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
காணொலி காட்சி மூலமாக தமிழக முதல்வர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். நாங்கள் திட்டமிட்டது 25 ஆயிரம் பேர் மட்டும்தான். ஆனால் நேற்றைய மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முருகனுக்கு எடுக்கின்ற இந்த மாநாட்டை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். 160 முருகன் தொடர்பான புகைப்பட கண்காட்சி, 3டி திரையரங்கம், வி.ஆர். கலையரங்கம், புத்தக கண்காட்சியை லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர். மாநாட்டிற்கு வருகை தந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. 1.25 லட்சம் பக்தர்கள் உணவு அருந்தி உள்ளனர்.
இன்று 2-ம் நாள் நிகழ்ச்சியில் சான்றோர்கள், ஆதீனங்கள், நீதியரசர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. 2-ம் நாள் மாநாடும் வெற்றி பெறும்.
கண்காட்சியைப் பொறுத்தவரை பொது மக்கள் பார்வையிட மேலும் 5 நாட்கள் நீடிக்கப்படுகிறது.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது இந்த அரசின் தாரக மந்திரம். இந்த முருகன் மாநாட்டை பொருத்தவரை தமிழக அரசு, இந்து சமய அறநிலைத்துறை இணைந்து நடத்துகின்ற நிகழ்ச்சி. இது அரசியல் சார்பற்ற அரசு விழா. முருக பக்தர்களால் கொண்டாடப்பட கூடிய நிகழ்ச்சி. இந்த மாநாட்டில் 16 முருக பக்தர்களுக்கு 1 பவுன் தங்க நாணயம் மற்றும் விருதுகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.