என்ஆர்.காங்கிரஸ் பொதுச்சயெலாளர் தனது ஆதரவாளர்களுடன் அமைப்பாளர் சிவா முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

புதுச்சேரி மாநில என்.ஆர். காங்கிரஸ் இளைஞரணி பொதுச்செயலாளர் அக்கட்சியில் இருந்து விலகி தமது ஆதரவாளர்களுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இணையும் விழா லப்போர்த் வீதியில் உள்ள திமுக அலுவலகத்தில் நடந்தது.

புதுச்சேரி மாநில என்.ஆர் காங்கிரஸ் இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்த அரியாங்குப்பம் தொகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் இன்று அக்கட்சியில் இருந்து விலகி தமது ஆதரவாளர்கள் குப்பன், கணபதி, செல்வகுமார், செந்தில், சிவா, சரவணன் உள்ளிட்ட 200 பேருடன் திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் முன்னிலையில் தங்களை திமுக இணைத்துக் கொண்டனர். திமுக–வில் இணைந்தவர்களை பொன்னாடை அணிவித்து வரவேற்ற அமைப்பாளர் இரா. சிவா அவர்கள் கட்சியில் இணைந்தவர்களிடம் திமுக உறுப்பினர் படிவம் வழங்கி வாழ்த்தி பேசினார்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் இன்று தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இந்தியாவிற்கே முன்மாதிரி இயக்கமாக இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டு இருக்கின்றவர்களை வரவேற்கிறேன். முழுக்க இன உணர்வு, மொழி உணர்வோடு கொள்கை முழக்கத்தை முன்வைத்து நடைபோடுகின்ற இயக்கம் திமுக. வேலைவாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம் என அனைத்திலும் தனித்துவம் பெற்ற மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. அதுபோன்ற திராவிட மாடல் சாயல் புதுச்சேரியிலும் வரவேண்டும் என்பது மக்களின் எண்ணமாக உள்ளது. தமிழினத்தின் ஆட்சி புதுச்சேரியில் அமைய வேண்டும். மக்கள் நம் இயக்கத்தின் மீது மரியாதை வைத்துள்ளார்கள். அதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாடுபட வேண்டும். தமிழக திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரியில் அமைந்தால் தொழில் புரட்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு உண்டாகும், பெண்கள் முன்னேற்றம் என அனைத்து நிலையிலும் மாநிலம் வளர்ச்சி பெறும் வாய்ப்பு இருக்கும். இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கி, தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகள் ஆட்சியை ஒன்றிய அரசு இயக்கி வருகிறது. இவற்றையெல்லாம் கலைந்து புதுச்சேரி மக்கள் தனித்துவமான வாழ்க்கையை வாழ நாம் வழிவகை செய்ய வேண்டும். புதுச்சேரியின் தனித்தன்மையை காக்கின்ற புதுச்சேரி மக்களுக்கான ஆட்சியை அமைக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

நிகழ்ச்சியில், இளைஞர் அணி மாநில அமைப்பாளர் எல். சம்பத், எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் கோபால், தொகுதி செயலாளர்கள் சீதாராமன், சக்திவேல், மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் சங்கர், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் டாக்டர் நித்திஷ், உத்தமன், தாமரைக்கண்ணன், ரெமிஎட்வின், தமிழ்ப்பிரியன், பஜிலுதீன், சந்துரு, கிருபாசங்கர், அகிலன், மாநில சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் லியாகத் அலி, மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் ஸ்டிப்பன்ராஜ், வழக்கறிஞர் கௌதம பாஸ்கரன், அய்யனார், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் யோகேஷ், கிளை செயலாளர்கள் சரவணன், விமல்ராஜ், முருகன், விமல், ஜெகன், பாபு, குமார், சட்ட கல்லூரி திமுக அமைப்பு நிர்வாகிகள் நரேந்திரன், அர்ஷத் இம்தியாஸ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநில மாணவர் அணி அமைப்பாளர் எஸ்.பி.மணிமாறன் செய்திருந்தார்.

Related posts

Leave a Comment