சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை: –
புதுச்சேரி ஆட்சி மொழி சட்டம் 1965–ன் படி நமது யூனியன் பகுதியின் ஆட்சி மொழியாக தமிழ், தெலுக்கு, மலையாளம், பிரெஞ்ச் மற்றும் ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் சென்ற 2006–ல் பாராளுமன்ற ராஜ்யசபையில் நடந்த விவாதத்திலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமுதல் இன்று வரை பல்வேறு அரசுகள் மாறினாலும் ஆட்சி மொழியில் எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை.
புதுச்சேரி – காரைக்கால் பகுதிகளில் தமிழும், ஏனத்தில் தெலுங்கும், மாஹேயில் மலையாளமும் அந்தந்த பகுதி மக்களின் வழக்கத்திற்கேற்ப அலுவல் மொழியாக தொடர்ந்து வருகின்றன. அரசு வேலைவாய்ப்புகளில் இதுவரை நடைபெற்ற அனைத்து தகுதி தேர்வுகளும் பிராந்திய மொழியோடு ஆங்கிலமும் துணை மொழியாகக் கொண்டுதான் நடத்தப்பட்டு வருகின்றன.
சென்ற 2022–ல் நடைபெற்ற யுடிசி தேர்வு மற்றும் சமீபத்தில் நடைபெற்ற காவலர் தேர்வு வரை இந்த வழிமுறை தான் பின்பற்றப்பட்டு வந்துள்ளது.
ஆனால் தற்பொழுது அரசு நடத்த இருக்கும் உதவியாளர் தேர்வில் இந்த நடைமுறை முற்றிலும் மாற்றப்பட்டு ஆங்கிலம் மட்டுமே தேர்வுக்கான மொழியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆட்சிமொழி சட்டத்தையே மீறிய செயலாகும். இச்செயல் கண்டனத்திற்குரியது. இந்த அரசு எப்படி இந்த முடிவை எடுத்தது. இது மக்கள் விரோத செயலாகும். மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தெரிந்துதான் இந்த முடிவு எடுக்கப்பட்டதா?. அப்படி முதல்வருக்கு தெரியவில்லை என்றால் அறிவிப்பு செய்த அதிகாரி மீது இந்த அரசு பாரபட்சமின்றி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியில் அரசு நடத்தும் பள்ளிகள் அனைத்தும் ஓரிரு ஆண்டுகள் வரை தாய்மொழி வழி பள்ளிகளே. அங்கு தாய்மொழியில் படித்து வந்தவர்கள் தான் இன்று பட்டதாரிகளாக வேலை தேடிய நிலையில், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர். இப்படி தாய்மொழியில் கல்வி கற்றவர்கள் அரசு நிர்வாகம் செய்ய தகுதியற்றவர்களாகக் கருதி அவர்களை வெளியேற்றும் முயற்சிதான் இந்த ஆங்கில வழி தேர்வு முறை என்பது. இது பெரும்பான்மை தமிழ்வழி கற்ற இளைஞர்களை புறக்கணிக்கும் மிகப் பெரிய துரோகமாகும். அத்துடன் அலுவல் மொழி தாய்மொழி என்ற அந்தஸ்தை மறுக்கும் செயலுமாகும். இது ஆட்சிமொழி சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையும் ஆகும். தமிழ்வழி இளைஞர்களை பழிவாங்கும் இந்த அரசின் ஆட்சிமொழி சட்டத்திற்கு எதிரான செயல்பாட்டை உடனே இவர்கள் சரிசெய்ய வேண்டும். தேர்வுக்கான இந்த அறிவிப்பின்10.4–வது பகுதியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள “கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டும் அமையும்” என்ற சரத்தை உடனடியாக மாற்ற வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில் இளைஞர்களையும், பொது மக்களையும் திரட்டி இந்த அரசை எதிர்த்து மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.