ஐசி 814 – The Kandahar Hijack’ வெப் தொடருக்கு எதிர்ப்புக்குரல் எழுந்த நிலையில் நெட்பிளிக்ஸ் உள்ளடக்க தலைவருக்கு (CONTENT HEAD) மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது. இந்த தொடரை அனுபவ் சின்ஹா இயக்கியுள்ளார். விஜய் வர்மா, நஸ்ருதீன் ஷா, அரவிந்த் சாமி, தியா மிர்சா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
1999 டிசம்பரில், ஐசி 814 என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்கு செல்லும் வழியில், 5 பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. அப்போது பயணிகளின் உயிரை காப்பாற்ற வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு 3 பயங்கரவாதிகளை விடுதலை செய்தது.
அப்போது உளவுத்துறை தலைவராக இருந்த அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் இருவரும் இந்த நிகழ்வில் முக்கிய பங்கு வகித்தனர்.
இப்படத்தில் பயங்கரவாதிகளுக்கு ‘சங்கர்’ மற்றும் ‘போலா’ என்ற இந்து பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையொட்டி நெட்ப்ளிக்ஸை தடை செய்யுங்கள் என்ற ஹேஸ்டேக் எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.