உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மூன்று மாடி கட்டடம் இடித்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகர் என்ற பகுதியில் குடோனாக பயன்பட்டு வந்த 3 மாடி கட்டிடம் ஒன்று இன்று [சனிக்கிழமை] மாலை 5 மணியளவில் இடிந்துள்ளது.
இதில் பலர் உள்ளே சிக்கிய நிலையில் தகவல் அறிந்து விரைந்த மீட்புப்படையினர் அவர்களை வெளியில் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 24 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் பலர் உள்ளே சிக்கியுள்ளதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகிறது. உ.பி முதல்வர் யோகி ஆதித்தனாத், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தொடர்பில் உள்ளனர். இடித்து விழுந்த இந்த மூன்று மாடி கட்டடம் 4 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட நிலையில் இதில் மோட்டார் வாகன ஒர்க் ஷப்பாகவும், மருத்துகள் சேமிக்கும் குடோனாகவும் இயங்கி வந்துள்ளது. மேலும் சமீபத்தில் இங்கு மேற்கொண்டு கட்டுமானப் பணிகளும் நடந்துள்ளதாகத் தெரிகிறது.