அன்னபூர்ணா நிறுவனரை மன்னிப்பு கேட்கச் செய்த வீடியோ வைரல் நிர்மலா சீதாராமனுக்கு குவியும் கண்டனங்கள்

கோவையில் மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் சீனிவாசன் மன்னிப்புக் கேட்கும் விடியோ தற்போது அகில இந்திய அளவில் சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

கோவையில் ஜிஎஸ்டி பற்றி நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் சீனிவாசன் கேள்வி எழுப்பிய விடியோ கடந்த இரு நாள்களாக டிரெண்ட் ஆனது.

இந்த நிலையில், கேள்வி கேட்ட சீனிவாசனை அழைத்து நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்புக் கேட்கச் செய்ததுடன், அந்த விடியோவையும் பாரதிய ஜனதா தரப்பிலிருந்து வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த விடியோவுடன் இணைந்தே கேள்வி கேட்ட தொழிலதிபரை மன்னிப்பு கேட்க வைத்ததாக, நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கோவை சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது ஜிஎஸ்டி குறித்து அன்னபூர்ணா உணவகங்களின் நிறுவனர் சீனிவாசன் பேசுகையில்,

“இனிப்புக்கு குறைவான ஜிஎஸ்டியும், காரத்துக்கு அதிகமான ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பில் போடுவதில் சிரமம் உண்டாகிறது. பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை, ஆனால், அதில் வைக்கும் க்ரீமுக்கு ஜிஎஸ்டி போடப்படுகிறது.

எங்கள் கடைக்கு அடிக்கடி வரும் கோவை எம்எல்ஏகூட சண்டை போடுவார். அவரிடம் ஜிஎஸ்டி குறித்து கேட்கப்பட்டதற்கு, வடநாட்டில் அதிகமானோர் இனிப்பு சாப்பிடுவதால் அதற்கு ஜிஎஸ்டி குறைவு எனக் கூறியுள்ளார்.

எனவே, அனைத்து உணவுப் பொருள்களுக்கு ஒரே மாதிரியான ஜிஎஸ்டி போட்டால் யாருக்கும் சிரமம் இருக்காது. குறைவாக உள்ள பொருள்களின் ஜிஎஸ்டி விகிதத்தை ஏற்றினாலும் பரவாயில்லை” எனத் தெரிவித்தார்.

இவரது பேச்சை கேட்ட அரங்கில் இருந்தவர்களும் மேடையில் இருந்த நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் சிரித்தனர்.

இந்த நிலையில், நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்கும் விடியோ நேற்றிரவு பாரதிய ஜனதா கட்சியினரால் ஊடகங்களில் பகிரப்பட இன்று வைரலாகி வருகின்றது.

இந்த விடியோவில், நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்த சீனிவாசன், “நான் எந்த கட்சியைச் சார்ந்தவனும் அல்ல. வருந்தும்படி, பேசியதற்கு மன்னித்து விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவருக்கும் அறிவுரை வழங்கிய நிர்மலா சீதாராமன், “ஜிஎஸ்டி குறித்து தாங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஆனால், கோவை எம்எல்ஏ கடைக்கு அடிக்கடி வருவார், சண்டை போடுவார் போன்ற கருத்துகள் பொதுவெளியில் எப்படி பேசலாம்?” எனக் கேள்வி எழுப்பினார்.

இந்த நிகழ்வின்போது, கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசனும் உடனிருந்தார்.

இந்த உரையாடல் முழுவதும் விடியோவாகப் பதிவு செய்யப்பட்டு பாஜகவின் சமூக ஊடகப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் பாலாஜி உள்ளிட்டோர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர். இதனிடையே, இன்று பகல் 12 மணி வரையிலும் இருந்த சர்ச்சையான இந்த விடியோ பகிர்வை 12.30 மணிவாக்கில் நீக்கிவிட்டி்ருக்கின்றனர்

அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்கும் விடியோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பொதுமக்களும் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Related posts

Leave a Comment