ஏனம் கோதாவரி ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
வட ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவில் கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள சபரி, கவுதமி, கோதாவரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள கிளை நதிகள் வழியாக ஆந்திரா ஏனாம் பிராந்தியத்தையொட்டியுள்ள பத்ராச்சலம், தவிலேஸ்வரம் அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
அணைகளில் தண்ணீர் இருப்பு பாதுகாப்பு அளவை மீறி விட்டதால் நீர், கோதாவரி ஆற்று வழியே கடலுக்கு அனுப்பப்படுகிறது. இதனால் கடல் மற்றும் கோதாவரி ஆற்றையொட்டி உள்ள ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இங்குள்ள பாலயோகி பாலத்தை தாண்டி வெள்ள நீர் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் ஏனாமிற்கு 2வது வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கோதாவரியை ஆற்றில் வெள்ள பெருக்கை பார்வையிட்டு ஆய்வு செய்த ஏனாம் மண்டல நிர்வாக அதிகாரி முனுசாமி கூறுகையில், ‘ஆற்றில் வெள்ள பெருக்கு அதிகரித்துள்ளதால் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும் என, மீன்வளத்துறை மூலம் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளான பிரான்சிபா, பால யோகி நகர், பழைய ராஜிவ் நகர், குருசம்பேட்டை, குரு கிருஷ்ணாபுரம் மற்றும் கடலோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து பகுதிகளிலும் மோட்டார் மூலம் வெள்ள நீரை வெளியேற்றுவது, போதிய மணல் மூட்டைகளை வைப்பது, படகு மீட்பு குழுக்களை தயாராக வைப்பது, புதுச்சேரியில் இருந்து மருத்துவ குழுவை அழைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.