தில்லியில் இரண்டு அடுக்கு கொண்ட வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகியுள்ளனர்.
தில்லியின் கரோல் பாக் பகுதியில் உள்ள இரண்டு அடுக்கு கொண்ட வீட்டின் ஒரு பகுதி இன்று காலை இடிந்து விழுந்தது. இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தன் பேரில் அவர்கள் மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியானதாகவும், 14 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தில்லி காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.