தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார்.
அங்கு, காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் அண்ணா சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பிறகு, ” மாநில உரிமைகளை பெற அண்ணா, கலைஞர் வழியில் அயராது உழைப்போம்” என அண்ணா நினைவு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
பிறகு, பவள விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரதிதாசன் வரிகளோடு உரையைத் தொடங்கினார்
அப்போது அவர் கூபேசியதாவது:-
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தலைவர்களை காஞ்சியில் கண்டு..
அண்ணா உருவாக்கிய இயக்கத்தின் பவள விழா கொண்டாட்டத்தை நடத்தி வருகிறோம். 1949ம் ஆண்டு சென்னை ராயபுரத்தில் திமுக தொடங்கப்பட்டது.
வான்மழை வாழ்த்திட உருவான திமுக இன்று வையகம் வாழ்த்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
கருணாநிதியின் பாதையில் திமுகவை தொடர்ந்து வளர்த்து வருகிறோம். நாங்கள் செய்த சாதனைகளுக்கு கூட்டணி தலைவர்களான நீங்களும் துணை நின்றீர்கள்.
தமிழகத்தில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். அகில இந்திய அளவில் பாஜகவை வீழ்த்திட இந்திய கூட்டணி உருவாக்கப்பட்டது.
சில கட்சிகளிள் கூட்டணி, தேர்தல் நேரத்தில் உருவாகி, தேர்தலுக்குப் பின் கலைந்துவிடும். ஆனால் நம் கூட்டணி அப்படியில்லை. நமது ஒற்றுமையைப் பார்த்து நமது கொள்கை எதிரிகளுக்கு பொறாமையாக உள்ளது. நமக்குள் மோதல் வராதா, பகையை வளர்க்க முடியாதா என்ற வேதனையில் பொய்களை பரப்பி அற்பத்தனமான காரியங்களை செய்து தற்காலிகமாக சந்தோஷம் அடைந்து வருகின்றனர். அவர்களின் கனவு எப்போதும் பலிக்காது. பாசிசமும், மதவாதமும் தமிழகத்தில் நுழைய கூடாது என்பதற்காகவே நாம் சேர்ந்துள்ளோம்.
மாநில சுயாட்சி கொள்கையை அடைய பல்வேறு நடவடிக்கைகளை திமுக எடுத்துள்ளது. மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது.
தமிழகத்தில் ஒலித்த மாநில சுயாட்சி முழக்கம், பல்வேறு மாநிலங்களில் தற்போது எதிரொலிக்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமற்ற ஒன்று.
ஒரே மதம், ஒரே மொழி, ஒரே இனம், ஒரே வரி என முழங்குவது நடைமுறை சாத்தியமற்றது. ஒரே நேரத்தில் 4000க்கு மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வது சாத்தியமா ?
பாராளுமன்றத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிந்ததா ? 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தலை நடத்தியவர்கள், ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறார்கள்.
பாராளுமன்றத் தேர்தலையே ஒரே கட்டமாக நடத்த முடியாதவர்கள், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவேன் எனச் சொல்வது, ‘கூரை ஏறி கோழியை பிடிக்க முடியாதவர், வானத்தை கிழித்து வைகுண்டத்தை காட்டுவேன்’ என்று சொல்வது போல் உள்ளது.
தற்போது மத்தியில் உள்ள பாஜக 240 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது பெரும்பான்மை பலமில்லை. அதனால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கொஞ்சம் Gap விட்டா நாங்க புகுந்துவிடுவோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.