புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் இணைந்து, ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழாவை நடத்தி வருகின்றன. இந்த விழாவில் ஒரு சிறந்த தமிழ் படம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டு ‘குரங்கு பெடல்’ படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
குரங்கு பெடல்’ படம் ஒரு சிறுவனின் சைக்கிள் கனவை சொல்லும் படமாக உருவாகி இருந்தது. நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு
விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கத்தில் நடந்தது. செய்தி மற்றும் விளம்பரத்துறையின் இயக்குநர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு செயலாளர் கேசவன், அலையன்ஸ்பிரான்சேஸ் தலைவர் சதீஷ்நல்லாம்,நவதர்ஷன் திரைப்படகழகத்தின் செயலாளர் பழனி, ஆகியோர் வாழ்த்தினர். விழாவில், குரங்கு பெடல் திரைப்படத்தின் இயக்குநர் கமலக் கண்ணனுக்கு விருது வழங்கி முதல்வர் ரங்கசாமி வாழ்த்தினார். விழாவின் முடிவில் குரங்கு பெடல் படம் திரையிடப்பட்டது. நிகழ்ச்சி முடிவில் செய்தி மற்றும் விளம்பரத்துறையின் தனசேகரன் நன்றி கூறினார்.
இன்று 5-ம் தேதி சனிக்கிழமை ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற தெலுங்கு மொழி திரைப்படமும், 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ‘அரியிப்பு’ என்ற மலையாள மொழி திரைப்படமும், 7ம் தேதி திங்கள் கிழமை ‘டோனிக்’ என்ற வங்காள மொழி திரைப்படமும், 8ம் தேதி செவ்வாய் கிழமை ‘மேஜர்’ என்ற இந்தி மொழி திரைப்படமும் திரையிடப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என்று, புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.