புதுச்சேரி.அக்.15-அரசு கலை, அறிவியல் கல்லுாரியில், கழிவறையின் மேற்கூரையின் காரை பெயர்ந்து விழுந்ததில் மாணவி படுகாயமடைந்தார். இதனைக் கண்டித்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் வழுதாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி, இந்திரா காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வந்தது. கல்லுாரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர். அங்கு, இடம் பற்றாக்குறை காரணமாக கோரிமேடு, இந்திரா நகர் அரசு பள்ளி வளாகத்திற்கு, கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திரா காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போது வகுப்புகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், கல்லுாரியின் மைக்ரோ பையாலஜி, 2ம் ஆண்டு பயிலும் மாணவி நேற்று மதியம் 1:00 மணி அளவில் மாணவிகள் கழிவறைக்கு சென்று உள்ளார். அப்போது, மழையின் காரணமாக சேதமடைந்திருந்த கழிவறையின் மேல்தளக் காரை திடீரென உடைந்து, மாணவியின் மீது விழுந்தது.
இதில், காலில் படுபடுகாயம் அடைந்த மாணவியை, சக மாணவிகள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை கண்டித்தும், கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்டிதர வலியுறுத்தியும் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லுாரியின் முன் திரண்டனர்.

பின்னர், அங்கிருந்து ஊர்வலமாக வழுதாவூர் சாலைக்கு சென்று, கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே மதியம் 3:00 மணி அளவில் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், எஸ்.பி., வீரவல்லவன் தலைமையில் போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கல்லுாரிக்கு போதிய இட வசதி இல்லாததால், இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. ஆகையால், உடனடியாக புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினர்.
இதற்கு, எஸ்.பி., வீரவல்லவன் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர். மாணவர்களின் மறியல் போராட்டம் காரணமாக, வழுதாவூர் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
இதற்கிடையே, கல்லுாரி மாணவ, மாணவிகளின் போராட்டத்தின் காரணமாக, இன்று( 15ம் தேதி) முதல் அடுத்த 10 நாட்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது.