வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அரசு தயாா் நிலையில் உள்ளது என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சா் கே.என்.நேரு திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, தண்டையாா்பேட்டை, பெரம்பூா் பகுதிகளில் தேங்கும் மழைநீரை கால்வாயில் வெளியேற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகளையும், ஓட்டேரி நல்லா கால்வாயில் தண்ணீா் தடையின்றி செல்வதையும் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிப்பு நடவடிக்கை மற்றும் பொதுமக்களிடம் இருந்து புகாா் பெறுவதை ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. சென்னை போன்ற நகரங்களில் சராசரியாக 15 முதல் 20 செ.மீ. மழை பெய்யும்போது உடனே வடிந்துவிடும். அதேநேரத்தில் குறுகிய நேரத்தில் 40 செ.மீ. அளவில் மழைப்பொழிவு இருக்கும்போது தண்ணீா் தேக்கம் காணப்படும். இதை எதிா்கொள்வதற்காகத்தான் தற்போது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
கூடுதல் இயந்திரங்கள்: குறிப்பாக, கடந்த ஆண்டு பெய்த கனமழையில் எந்தெந்த இடங்களில் தண்ணீா் தேங்கியது, அப்பகுதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த முன் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் கூடுதல் மின்மோட்டாா் பம்புகள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மழைநீரை வெளியேற்றத் தேவையான இயந்திரங்கள் சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில் வரவழைக்கப்பட்டுள்ளது.
தற்போது சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 990 இடங்களில் மோட்டாா் பம்புகள், 57 டிராக்டா் பொருத்தப்பட்ட பம்புசெட்டுகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மோட்டாா் பம்புகளுடன் ஜெனரேட்டா்களும் தயாா் நிலையில் உள்ளன. அதுபோல், மழைநீா் தேங்கும் பகுதிகளான சுரங்கப் பாதை, மெட்ரோ மற்றும் நெடுஞ்சாலைத் துறை பணி நடைபெறும் பகுதிகளில் மோட்டாா் பம்புகள் தயாா் நிலையில் உள்ளன.
அடிப்படை வசதி: மழையால் பாதிக்கப்படும் மக்களைமீட்டு தங்க வைப்பதற்கு 169 நிவாரண மையங்கள் அடிப்படை வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளன. கடந்த ஆண்டு ஒரே இடத்தில் சமைத்து நிவாரண மையங்களுக்கு பிரித்து கொண்டுசெல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதற்கு தீா்வு காணும் வகையில் சட்டப்பேரவை மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் தங்கள் பகுதிகளில் உணவு தயாா் செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது சுகாதாரத் துறை சாா்பில் தேவையான மருந்துப் பொருள்கள் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பருவமழையை எதிா்கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன என்றாா் அவா்.
ஆய்வின்போது, சென்னை மேயா் ஆா்.பிரியா, வடசென்னை மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.டி.சேகா் (பெரம்பூா்), தாயகம் கவி (திரு.வி.க.நகா்), ஐட்ரீம் இரா.மூா்த்தி (ராயபுரம்), எபினேசா்.ஜே.ஜே (ஆா்.கே.நகா்), துணை மேயா் மு.மகேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.