தேசிய கீதத்தில் திராவிடத்தை விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா ஆளுநர்? ஸ்டாலின் கேள்வி

தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

டிடி தமிழ் தொலைக்காட்சியில் இந்தி தின விழா கொண்டாட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றபோது, இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் என்ற வரிகள் மட்டும் விடுபட்டு, பாடல் ஒலிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது,

ஆளுநரா? ஆரியநரா?

திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.

இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்!

திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?

தமிழ்நாட்டையும் – தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

இந்தி மாதம் கொண்டாடப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தநிலையில், தமிழ்நாட்டில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், திராவிடம் என்ற சொல் வரும் வரிகள் விடுபட்டு, பாடல் இசைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment