ஆன்மிகத் தலைவர் என கூறப்படும் ஜக்கி வாசுதேவ் நிறுவிய ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஆள்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான பிற வழக்கு விசாரணைகளுக்கு தடையில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஈஷா அறக்கட்டளையில் இருக்கும் தனது இரண்டு மகள்களும் மூளைச்சலவை செய்யப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தந்தை ஒருவர் அளித்த புகார் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், புகார் தாரரின் இரண்டு மகள்களும், தங்களது சொந்த விருப்பத்தின் பேரிலேயே, ஈஷா யோகா மையத்தில் தங்கியிருப்பதாக தெரிவித்ததையடுத்து, உச்ச நீதிமன்றம் ஆள்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது, நாங்கள் ஆள்கொணர்வு மனு மீது மட்டும்தான் உத்தரவு பிறப்பித்திருக்கிறோம், மற்ற வழக்குகள் மீதான விசாரணை, நடவடிக்கைகள் தொடரலாம், பிற வழக்குகள் குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. சென்னை உயர்நீதிமன்றமும் பிறப்பித்திருக்காது, பிற வழக்குகள் தொடர்பாக நாங்கள் ஏதேனும் கருத்துகளை தெரிவித்தால், அது மூன்றாம் நபர்களால் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
இதன் மூலம், ஈஷா யோகா மையத்துக்கு எதிரான பிற வழக்கு விசாரணைகள் தொடரும் என கூறப்படுகிறது.
ஆன்மிக குரு என அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ் கோவையில் நடத்தி வரும் ‘ஈஷா பவுண்டேஷன்’ ஆசிரமத்தில் சட்டவிரோதமாக இரு பெண்கள் அடைத்துவைக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவில் பேரில் போலீஸாா் உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமையன்று நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.
அந்த நிலவர அறிக்கையில், ஈஷா யோகா மையத்தில் எத்தனை பேர் தங்கியிருக்கிறார்கள், அவர்களது மனநிலை எவ்வாறு உள்ளது, என்னென்ன குறைபாடுகள் உள்ளன என அனைத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஷா யோகா மையத்தில், 2024ஆம் ஆண்டு அக்.1ஆம் தேதி நிலவரப்படி, 217 பிரம்மச்சாரிகள், 2,455 தன்னார்வலர்கள், ஊதியம் பெறும் ஊழியர்கள் 891 பேர், ஊதியம் பெறும் தொழிலாளர்கள் 1,475 பேர், ஈஷா உறைவிடப் பள்ளி மாணவர்கள் 342 பேர், 175 ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள், 704 விருந்தினர்/தன்னார்வலர்கள், ஈஷா யோகா மையத்தில் உள்ள விடுதியில் தங்கியிருக்கும் விருந்தினர்கள் 912 பேர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஈஷா பவுண்டேஷனுக்கு அருகே இருக்கும் நிலத்தின் உரிமையாளர் எஸ்என் சுப்ரமணியன் என்பவர், ஈஷா யோகா மூலம் சுடுகாடு அமைப்பதைத் தடுத்து நிறுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதாகவும், அமைக்கப்பட்ட சுடுகாடு இன்னமும் செயல்படவில்லை என்றும் நிலவர அறிக்கையில் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஈஷா பவுண்டேசன் சார்பில் நடத்தப்படும் ஆசிரமத்தில் தனது இரு மகள்கள் அடைத்துவைக்கப்பட்டிருப்பதாக கூறி ஓய்வுபெற்ற பேராசிரியா் எஸ்.காமராஜ் என்பவா் தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனு மீதான விசாரணையை சென்னை உயா்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்றியும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக, ஈஷா பவுண்டேஷன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த அக்டோபா் 3-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு , பெண்கள் சட்டவிரோதமாக ஆசிரமத்தில் அடைத்துவைக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை விசாரிக்கக் கோரும் சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கொண்டு செயல்படுத்தாமல் இருக்குமாறு தமிழகக் காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
மேலும், இந்த விவகாரத்தில் செப்டம்பா் 30-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவின்படி நிலவர அறிக்கையை தமிழக காவல்துறையினர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, தமிழகத்தின் கோவை மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் 23 பக்க நிலவர அறிக்கை வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. நிலவர அறிக்கையில் கூறப்பட்டிருப்பது என்ன?
கடந்த 15 ஆண்டுகளில் ஈஷா பவுண்டேஷன் தொடா்புடைய விவகாரத்தில் ஆலந்துறை காவல் நிலையத்தில் காணாமல்போனவா்கள் குறித்து ஆலந்தூர் காவல்நிலையத்தில் மொத்தம் 6 வழக்குகள் பதிவானதும், அதில் 5 வழக்குகளில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதும் ஒரு வழக்கில் காணாமல் போனவா் இன்னும் கண்டறியப்படாததால் வழக்கு இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 7 வழக்குகள் சிஆா்பிசி பிரிவு 174-இல் பதிவு செய்யப்பட்டிருந்ததையும், அவற்றில் இரு வழக்குகள் விசாரணையின்கீழ் இருப்பதும் நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் காவல்துறை விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலையில் 7 வழக்குகள் ஈஷா பவுண்டேஷன் மீது தொடரப்பட்டுள்ளது.இந்த 7 வழக்குகளில், இரண்டு வழக்குகள், தடயவியல் அறிக்கைக்காக காத்திருக்கிறது.
ஈஷா அவுட்ரீச் அமைப்பில் பணியாற்றும் மருத்துவர் மீது, உள்ளூர் பள்ளியின் தலைமையாசிரியர் ஒருவர் போக்சோ வழக்குப் பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில், மருத்துவர் கைது செய்யப்பட்டு, பிணை மறுக்கப்பட்டு சிறையில் உள்ளார். இந்த வழக்கும் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்குகளைக் கடந்து, அந்த ஆசிரமத்தில் உள்ளவர்களில் தோராயமாக 558 பேரிடம் காவல்துறையினர் பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டறிந்துள்ளனர். அதாவது ஆசிரமத்தில் வழங்கப்படும் உணவு, பாதுகாப்பு, இதர விவகாரங்கள் உள்ளிட்டவை எப்படி இருக்கின்றன என்று கேட்கப்பட்டு அதன் விவரங்களும் நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்லாமல், தனது இரண்டு மகள்கள் ( 42 வயது மற்றும் 39 வயது) ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்துவைக்கப்பட்டிருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்களது தந்தை தாக்கல் செய்த வழக்கில், அப்பெண்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.
மேலும் நிலவர அறிக்கையில், கடந்த 2021ஆம் ஆண்டு யோகா பயிற்சி வகுப்புக்கு வந்த தில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளித்தப் புகாரும், பிறகு அப்பெண் அந்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொண்டதையும் விவரித்துள்ளது.
இது மட்டுமல்லாமல், பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களையும் ஈஷா யோகா மையம் அபகரித்துக்கொண்டதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
ஈஷா யோகா மையத்தில், ஆய்வு செய்த குழுவில் இடம்பெற்றிருக்கும் குழந்தைகள் நல நிபுணர்கள் பலரும், குழந்தைகளுக்கான உதவி மையம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், குழந்தைகளுக்கான உரிமைகள் மற்றும் போக்சோ சட்டம் குறித்தும் எடுத்துக்கூற வேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, அங்கிருக்கும் பலருக்கும் மனநிலையில் தடுமாற்றம் இருப்பதாகவும், அவர்களை தொடர்ந்து கண்காணித்தால்தான் உண்மையை அறிய முடியும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
ஈஷா மருத்துவ மையம் குறித்து, கோவை சுகாதார சேவை துறையின் இணை இயக்குநர் விரிவான தகவலை அளித்துள்ளார். அதில், ஈஷா மருத்துவ மையத்தில் இருக்கும் கருவிகள் குறித்து சந்தேகம் எழுப்பியிருப்பதோடு, அங்கு பயிற்சிபெறாத நபர்கள் எக்ஸ்-ரே போன்றவற்றை இயக்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். தாங்கள் விசாரணை நடத்திய பெண்கள், தாங்களாகவே அங்கு தங்கியிருப்பதாகக் கூறியிருப்பதாகவும், பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ், இயங்க வேண்டிய புகார் விசாரணை அமைப்பானது சரியாக இயங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்தான் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது.
ஈஷா யோகா மையத்தில் இருக்கும் சிறுவனின் பெற்றோர், ஹைதராபாத் செய்தியாளர்கள் இல்லத்தில், செய்தியாளர்களிடம் பேசுகையில், தங்களது மகனுக்கும் பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதாகவும், கரோனா பொதுமுடக்கத்தின்போதுதான் தங்களுக்கு இது தெரிய வந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். அதோடு, அங்கு நடந்த துன்புறுத்தல் காரணமாக, தங்கள் மகன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, தங்களுக்கு கடிதம் எழுதிவைத்திருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதுபோன்றே, தங்களது 7 வயது மகள், ஈஷா பவுண்டேஷனில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக அவரது தாய் குற்றஞ்சாட்டியிருக்கிறார். அவர் இதுபற்றி கூறுகையில், கோவை ஈஷா உறைவிட பள்ளியில் இருந்து படித்த பல மாணவிகள், ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு வன்கொடுமை செய்யப்பட்ட பல மாணவிகளின் பெற்றோர்களைப் போலவே தானும் ஒருவர் என்றும், தனது மகள் ஒரு முறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு புகார்களும் ஹைதராபாத்திலிருந்து பதிவாகியிருக்கிறது.