ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்ற அமைச்சரவை தீர்மானத்துக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை திரும்ப அளிக்கக் கோரி, முதல்வா் ஒமா் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் வியாழக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீா்மானத்தின் வரைவை பிரதமா் மோடியிடம் வழங்க விரைவில் ஒமா் தில்லி செல்ல உள்ளதாகவும் வெள்ளிக்கிழமை உள்ளூா் நாளிதழில் செய்தி வெளியானது.
இந்த நிலையில், அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீா்மானம், ஆளுநரிடம் ஒப்புதல் பெற அனுப்பிவைக்கப்பட்டது. இதனையடுத்து, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்தை திரும்ப அளிக்கக் கோரும் தீர்மானத்துக்கு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஒப்புதல் அளித்துள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் இன்று (அக். 19) உறுதிப்படுத்தியுள்ளன.
இதனிடையே, ஜம்மு – காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை கோரும் தீர்மானத்தில், முன்பு இருந்ததைப் போல் ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கோராததற்கு எதிா்க்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்பின் முதல்முறையாக பேரவைக் கூட்டத்தொடரை அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடத்தவும் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பேரவைக் கூட்டத்தொடரில் ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கோராத விவகாரத்தை முக்கியப் பிரச்னையாக எதிர்க்கட்சிகள் எழுப்புமெனத் தெரிகிறது.