எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுள் தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் ‘கனவு ஆசிரியர் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது.
2024-25ஆம் ஆண்டுக்கான ஆன்லைன் தேர்வில் 10,305 ஆசிரியர்கள் பங்கேற்றனர். 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்வின் மூலம் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்ணுடன், 162 இடைநிலை ஆசிரியர்கள், 177 பட்டதாரி ஆசிரியர்கள், 41 முதுநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 380 பேர் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களில் 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற 54 ஆசிரியர்கள் கடந்த 23-ந்தேதி பிரான்ஸ் நாட்டுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். 28-ந்தேதி வரை சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் உடன் சென்றுள்ளார்.
பிரான்ஸ் பயணத்தின்போது புகழ்பெற்ற இடங்களை ஆசிரியர்களுடன் பார்வையிட்ட புகைப்படங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து வள்ளுவரையும், அன்னைத் தமிழையும் போற்றினோம். இந்நிகழ்வை ஏற்பாடு செய்த பிரான்ஸ் தமிழ்க் கலாச்சார மன்றத்தினருக்கு அன்பும் நன்றியும் என்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய வீடியோவை எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.