திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: அறங்காவலர் குழு தலைவர் அறிவிப்பு

திருப்பதி, திருமலை கோயிலில் வேலை செய்பவர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் என்று அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பி.ஆர்.நாயுடு தெரிவித்தார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலின் (டிடிடி) அறங்காவலர் குழு தலைவராக பி.ஆர்.நாயுடு அண்மையில் நியமனம் செய்யப்பட்டார். மேலும், டிடிடி குழு உறுப்பினர்களாக 24 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அறங்காவலர் குழு புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பி.ஆர். நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டதற்காக முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர் லோகேஷ் உள்ளிட்டவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அறங்காவலர் குழு தலைவராக பணியாற்றுவதை பாக்கியமாக கருதுகிறேன். கடந்த ஆட்சி காலத்தை போல் அல்லாமல் வெளிப்படைத்தன்மையாகவும் உண்மையாகவும் பாடுபடுவேன்.

திருமலை தேவஸ்தானத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். தேவஸ்தானத்தில் பணியாற்றும் மாற்று மதத்தினரை வேறு அரசு பணிக்கு மாற்றுவதா அல்லது கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்புவதா என்பது குறித்து மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்கப்படும்.

இதுதான் என்னுடைய முதல் முயற்சி. தேவஸ்தான அறக்கட்டளையில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக எனக்கு புகார்கள் வந்துள்ளன. ஒவ்வொரு பிரச்சினையையும் நாங்கள் தீர்ப்போம்.

அறங்காவலர் குழு தலைவராக நியமித்தது என்னுடைய அதிர்ஷ்டம் என்றுதான் கூறுவேன். நான் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன். நான் அடிக்கடி திருப்பதி கோயிலுக்கு வந்து சுவாமியை தரிசித்து விட்டுச் செல்வேன். என்னுடைய வாழ்க்கையில் நான் இதை திருப்புமுனையாக உணர்கிறேன்.

கோயிலில் பணியாற்றும் மாற்று மதத்தினரை நீக்குவது என்பது மிகவும் சிரமமான காரியம். இருப்பினும் இந்த முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே இருந்த ஜெகன்மோகன் தலைமையிலான அரசு பல்வேறு தவறுகளை திருப்பதி திருமலை தேவஸ்தான விவகாரத்தில் செய்துவிட்டது. ஜெகன் மோகன் ஆட்சிக் காலத்தில் திருப்பதி தனது புனிதத்தை இழந்துவிட்டது. ஜெகன் மோகன் ஆட்சிக் காலம் இருந்த 5 ஆண்டுகளுக்கும் நான் திருப்பதி கோயிலுக்குச் செல்லவே இல்லை. வழக்கமாக ஆண்டுக்கு 5 அல்லது 6 முறை திருப்பதிக்குச் சென்று வருவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

Leave a Comment