நடிகர் டெல்லி கணேஷ் (80) உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக இன்று(நவ. 10) காலமானார்.
நடிகர் டெல்லி கணேஷின் உடல் ராமபுரத்தில் உள்ள அவரது வீட்டில்பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவரது இறுதிச் சடங்குகள் நாளை காலை 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும் என்று குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
நாடகத்துறையில் இருந்து பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகராக அறிமுகமானவர் நடிகர் டெல்லி கணேஷ். தொடர்ந்து பசி, அபூர்வ சகோதரர்கள், தாயா தாரமா, மனிதன், நாயகன், சிந்து பைரவி, அவ்வை சண்முகி, ஆஹா, லண்டன், மாசிலாமணி உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு இந்திய விமானப்படையில் 10 ஆண்டுகள் பணியாற்றினார்.
நகைச்சுவை, வில்லன், குணசித்திரம் என பன்முக பாத்திரங்களில் நடித்தவர் டெல்லி கணேஷ். மர்மதேசம், வீட்டுக்கு வீடு லூட்டி, மனைவி, இப்படிக்குத் தென்றல் உள்ளிட்ட சின்னத் திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவருக்கு 1979 ஆம் ஆண்டு பசி திரைப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருதும், 1993-94 ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும் கிடைத்தது. சமீபத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் டெல்லி கணேஷுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.