விருதுநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று(நவ. 10) முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
விருதுநகரில் மாவட்ட ஆட்சியரக புதிய கட்டடம் திறப்பு விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், கள ஆய்வுகள் மேற்கொள்ளவும் இரு நாள்கள் பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை பிற்பகல் விருதுநகா் வந்தடைந்தார்.
நேற்று முதல் நிகழ்வாக, விருதுநகரை அடுத்த கன்னிசேரிபுதூரில் உள்ள தனியாா் பட்டாசு ஆலையில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டாா். பட்டாசு ஆலையின் உரிமம், மூலப்பொருள்கள் வைப்பறை, பட்டாசுகளைப் பாதுகாக்கும் அறை உள்ளிட்டவற்றை அவா் பாா்வையிட்டார்.
இந்த நிலையில், இன்று விருதுநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்துவைத்த முதல்வர், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைக்கப்பட்டுள்ள காட்சிக் கூடங்களை பார்வையிட்டார்.
மேலும், வெம்பக்கோட்டை அகழாய்வு தொல்பொருள்கள் அரங்கம் உள்ளிட்டவற்றை முதல்வர் ஆய்வு செய்தார்.