விஜயகாந்தின் நினைவுநாளையொட்டி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி தேமுதிகவினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிகாலை முதல் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். விஜயகாந்தின் நினைவிடத்தில் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விஜயகாந்தின் நினைவு நாளன்று அமைதிப் பேரணி நடத்த தமிழக அரசிடம் தேமுதிக கோரிக்கை வைத்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு பகுதி என்பதால் போக்குவரத்து பிரச்னை ஏற்படும் எனக்கூறி காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் அவர்களுடன் தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
இதையடுத்து தடையை மீறி தேமுதிகவினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ், விஜய பிரபாகரன் மற்றும் தொண்டர்கள் பலரும் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை பேரணி நடைபெற்று வருகிறது.
இதனால் சென்னை கோயம்பேடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.