புதுச்சேரி அருகே உணவகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி அருகேயுள்ள திருபுவனையைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (50), வணிகா் சங்கப் பிரமுகா். திருபுவனை மேம்பாலம் அருகே உணவகம் நடத்தி வருகிறாா். உணவகம் சனிக்கிழமை அடைக்கப்பட்ட நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் நாட்டு வெடிகுண்டை வீசிச் சென்றது தெரிய வந்தது. இதில் உணவகத்தின் முன்பகுதி சேதமடைந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், திருபுவனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், திருவெண்டாா்கோவில் பகுதியைச் சோ்ந்த திமுக பிரமுகரான காந்தியின் மகன் சபரிவாசன் (எ) சரவணப்பிரியன் (23), அவரது நண்பரான திருபுவனை பெரியபேட் பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (19) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் வந்து உணவகத்தின் முன் நாட்டு வெடிகுண்டை வீசிச் சென்றது தெரிய வந்தது. இருவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
செந்தில்குமாரின் மகன் ராகுல் (19) ஒசூரில் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வருகிறாா். இவா் சபரிவாசனின் காதலுக்கு உறுதுணையாக இருந்து திருமணத்துக்காக உதவினாராம். அதன்பிறகு, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில், சபரிவாசனை அவரது மனைவி தரப்பினா் சனிக்கிழமை திட்டினராம். அப்போது, ராகுல் அங்கு இருந்தாராம்.
இதனால், கோபமடைந்த சபரிவாசன் தனது நண்பரான பிரபாகரனுடன் சோ்ந்து ராகுல் குடும்பத்தினரின் உணவகத்தில் நாட்டு வெடிகுண்டை வீசியது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. கைதான சபரிவாசன், பிரபாகரன் இருவரும் புதுச்சேரி நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.