எருமை மாடு மீது மழை பெய்வது போன்று வரையப்பட்ட பேனரை கையில் பிடித்துக் கொண்டு துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறை பணி நீக்க ஊழியர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது
புதுச்சேரியில் 2015-ம் ஆண்டு பொதுப்பணித்துறையில் 2642 பேர் பணிக்கு அமர்த்தபட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது பணிக்கு அமர்த்தபட்டதால் தேர்தல் ஆணையத்தால் 2016 ஆம் ஆண்டு 2642 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இவர்கள் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக இவர்களுக்கு பணி வழங்கவில்லை.
இந்த நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பணி நீக்கம் செய்யப்பட்ட 2642 பேருக்கும் மீண்டும் பணி வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
ஆனால் இதுவரை அந்த அறிவிப்பு செயல்படுத்தப்படவில்லை இதனை கண்டித்தும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இரண்டாவது நாளாக இன்று எருமை மாடு மீது மழை பெய்வது போன்று வரையப்பட்ட பேனரையும் பதாகைகளையும் கையில் பிடித்துக் கொண்டு துணைநிலை ஆளுநர் மாளிகை முற்றுகையிட முயன்றனர்.
ஆம்பூர் சாலை வழியாக வந்த அவர்களை போலீசார் தடுப்பு கட்டை அமைத்து தடுக்கவே போலீசாருக்கும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து ஊழியர்கள் இரண்டாவது நாளாக கைது செய்யப்பட்டனர்.