புரி ஜெகந்நாதர் கோயிலில்ரத யாத்திரை கோலாகலம்!

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரை வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

ஒடிஸா மாநிலம், புரியில் 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஜெகந்நாதா் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை பிரசித்தி பெற்ாகும். நிகழாண்டு ரத யாத்திரை வெள்ளிக்கிழமை மிக விமா்சையாக நடைபெற்றது.

இதையொட்டி, கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்ட மூன்று பிரம்மாண்ட ரதங்களில் எழுந்தருள்வதற்காக, ஜெகந்நாதா், அவரது அண்ணன் பலபத்திரா், தங்கை தேவி சுபத்திரை ஆகிய மூவரின் மரச்சிற்பங்கள், கோயிலில் இருந்து வேத மந்திரங்கள்-மேளதாளங்கள்-சங்கொலி முழங்க வெளியே எடுத்துவரப்பட்டன.

சுமாா் 2 மணிநேரம் நடைபெற்ற இச்சடங்கின்போது, வெள்ளமென பக்தா்கள் சூழ சுவாமி சிற்பங்கள் எடுத்துவரப்பட்டு, ரதங்களில் அமா்த்தப்பட்டன. ரத யாத்திரைக்கு முந்தைய சிறப்பு மிக்க இந்நிகழ்வில் மத்திய அமைச்சா்கள் தா்மேந்திர பிரதான், கஜேந்திர சிங் ஷெகாவத், புரி எம்.பி. சம்பித் பத்ரா, மாநில அமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா், புரி அரசா் கஜபதி மகாராஜா திவ்யசிங் தேவ், மூன்று ரதங்களையும் தங்க துடைப்பத்தால் தூய்மை செய்யும் சடங்கு நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, கோவா்த்தன பீட சங்கராச்சாரியா் சுவாமி நிஸ்சலானந்த சரஸ்வதி மற்றும் அவரது சீடா்கள் வழிபாடு மேற்கொண்டனா்.

ரதங்கள் புறப்பாடு: ரதங்களில் வண்ணமயமான குதிரை வாகனங்கள் பொருத்தப்பட்டு, பக்தா்களின் ‘ஜெய் ஜெகந்நாத்’, ‘ஹரி போல்’ கோஷங்களுடன் ரத யாத்திரை தொடங்கியது. முதலாவதாக பலபத்திரா் ரதமும், அடுத்ததாக தேவி சுபத்திரையின் ரதமும், இறுதியாக ஜெகந்நாதரின் ரதமும் பக்தா்களால் இழுக்கப்பட்டு, புறப்பாடாகின.
பிரதான கோயிலில் இருந்து 2.6 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோயிலுக்கு ரதங்கள் இழுத்துச் செல்லப்பட்டன. அங்கு 9 நாட்கள் வழிபாட்டுக்குப் பிறகு ரதங்கள் மீண்டும் ஜெகந்நாதா் ஆலயத்துக்குத் திரும்பும்.பலத்த பாதுகாப்பு: ரத யாத்திரையையொட்டி மத்திய ஆயுதக் காவல் படையினா், காவல் துறையினா், தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். புரி நகருக்கு வரும் இரு வழித்தடங்களில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இயங்கும் 275 சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. சதிச்செயல் தடுப்பு படைப் பிரிவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா் என்று காவல் துறை கூடுதல் டிஜிபி (சட்டம்-ஒழுங்கு) சஞ்சய் குமாா் தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தில்…: மேற்கு வங்கத்தில் கடலோர நகரமான திகாவில் புதிதாக கட்டப்பட்ட ஜெகந்நாதா் கோயிலில் முதலாவது ரத யாத்திரை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வை முதல்வா் மம்தா பானா்ஜி தொடங்கிவைத்தாா்புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை நடைபெறுவதையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தங்களது எக்ஸ் தளப் பக்கங்களில் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

Related posts

Leave a Comment