நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து போன்ற இடங்களில் தனியார் நிறுவனம் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் நிலங்களை 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்று தேயிலை தோட்டங்களை நடத்தி வருகிறது. அங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிகின்றனர்.
தனியார் நிறுவனத்தின் குத்தகை காலம் வருகிற 2028-ம் ஆண்டுடன் முடிவடையும் நிலையில், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வை அறிவித்தது. அதன்படி தனியார் நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிய விரும்புகிறவர்களுக்கு வால்பாறையில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்யவும், தொடர்ந்து பணியாற்ற விருப்பமில்லாதவர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்குவதாகவும் அறிவித்தது.
விருப்ப ஓய்வுபெறும் தொழிலாளர்கள் நேற்று வரை விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்களுக்கு 25 சதவீத நிவாரணத்தொகையும், வருகிற ஆகஸ்டு மாதம் 7-ந் தேதிக்குள் குடியிருப்புகளை காலி செய்து உடைமைகளை திருப்பி ஒப்படைத்தவுடன் மீதி 75 சதவீத நிவாரணத்தொகையும் வழங்குவதாக அறிவித்தது.
இதையடுத்து கடந்த சில நாட்களாக ஏராளமான தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் மறுவாழ்வு வசதி ஏற்படுத்தும் வரை குடும்பத்திற்கு ரூ.10,000 வழங்க கோரிய மாஞ்சோலை வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம்,

நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றும் மறுவாழ்வு வசதி ஏற்படுத்தும் வரை மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற கூடாது என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குத்தகை காலம் முடிவடைவதற்கு முன்பாகவே BBTC நிறுவனம் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.