புதுச்சேரி மாநில திட்டக்குழு கூட்டம் தலைமை செயலக கருத்தரங்கு அறையில் நடைபெற்றது. 2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை இறுதி செய்வதற்காக நடைபெற்ற இக்கூட்டத்திற்கு துணை நிலை ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனி ஜெயகுமார், திருமுருகன், சாய் ஜே சரவணகுமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, தலைமைச் செயலாளர் சரத் சவுகான், அரசு செயலாளர் மற்றும் துணை துறை தலைவர்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தில்நடப்பு ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் ரூ.12ஆயிரத்து 700 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு பின் துணைநிலை ஆளுநர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
எழுச்சிமிகு புதுச்சேரி என்பதுதான் இன்றைய கூட்டத்தின் முதன்மை நோக்கமாக இருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் துறை சார்ந்த அறிஞர்கள் எப்படி எல்லாம் புதுச்சேரியை முன்னேற்ற வேண்டும் என்பதற்கான கருத்துக்களை எடுத்து வைத்திருக்கிறார்கள். மக்களுடைய தேவைகளை எப்படி மனதிலே கொண்டு செயல்பட வேண்டும் என்பதை எடுத்து வைத்திருக்கிறார்கள். எல்லா விதமான யோசனைகளையும் பெற்றுக் கொண்டு அதை நடைமுறைப்படுத்துவதற்கான முடிவை எடுத்திருக்கிறோம். நிச்சயமாக எழுச்சிமிகு புதுச்சேரி என்பது வெறும் கோஷமாக இல்லாமல் அது நடைமுறையிலும் மகத்தான, வெற்றிகரமானதாக மாறப்போகிறது என்ற உணர்வோடுதான் இந்த கூட்டம் இன்று நடைபெற்று இருக்கிறது.
ரூ. 12,700 கோடிக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இதை எப்படி உயர்த்தலாம் என்பது பற்றியும் பல்வேறு விதமான கருத்துக்கள் வந்திருக்கிறது. எல்லா கருத்துக்களும் உள்வாங்கப்பட்டிருக்கிறது. நிச்சயமாக ஒரு புதிய எழுச்சியை முன்னேற்றத்தை புதுச்சேரி காணப்போகிறது.
எதிர்வரும் பட்ஜெட் ஏற்கனவே போட்ட பட்ஜெட்டின் தொடர்ச்சியாக இருக்கும்.இலவச அரிசி வழங்குவது குறித்து இந்த கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. தாய்மார்களின் கருத்துக்களை அறிந்து அதற்கு ஏற்ப அந்தத் திட்டம் மாற்றி அமைக்கப்படும்.
நானும் முதலமைச்சரும் என்ன கருத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை விட அதை வாங்கிப் பயன்படுத்தப் போகின்ற தாய்மார்கள் என்ன கருத்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறிந்து அதை அமல்படுத்தப் போகிறோம்.
சென்ற ஆண்டு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளிப்பது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.